நந்திகிராம் : மாநில காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உச்ச நீதிமன்றம் தடை!
வியாழன், 13 டிசம்பர் 2007 (17:19 IST)
நந்திகிராம் துப்பாக்கிச் சூடு நிகழ்வில் மேற்குவங்கக் காவல்துறைக்கு எதிராக மத்தியக் குற்றப் புலனாய்வுக் கழகம் நடவடிக்கை எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
நந்திகிராம் துப்பாக்கிச் சூடு தொடர்பாக கொல்கட்டா உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக மேற்குவங்க அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி,பாலகிருஷ்ணன் தலைமையிலான முதன்மை அமர்வு, மேற்குவங்க காவல்துறைக்கு எதிராக ம.பு.க. நடவடிக்கை எடுப்பதற்குத் தடை விதித்தது.
அதேநேரத்தில், கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி ம.பு.க. தனது விசாரணையைத் தொடரலாம் என்றும், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு மாநில அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
மேற்குவங்க மாநிலம் நந்திகிராமில் டாடா கார் தொழிற்சாலை அமைப்பதற்காக நிலத்தைக் கையகப்படுத்துவதை எதிர்த்து கடந்த மார்ச் 14 ஆம் தேதி நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு கொல்கட்டா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, "அப்பாவி மக்களைக் சுட்டுக் கொன்றதை நியாயப்படுத்த முடியாது" என்று குறிப்பிட்ட நீதிமன்றம், மேற்குவங்க காவல்துறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ம.பு.க. வுக்கு உத்தரவிட்டது.
கொல்கட்டா நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேற்குவங்க அரசு மேல்முறையீடு செய்தது.