வானிலை ஆய்வு மையங்களை நவீனப்படுத்த புதிய திட்டம் : அமைச்சரவை ஒப்புதல்!
வியாழன், 13 டிசம்பர் 2007 (16:43 IST)
வானிலை ஆய்வு மையங்களை நவீனப்படுத்தவும், வானிலை முன்னறிவிப்பு முறைகளை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுள்ள புதிய திட்டத்திற்கு மத்திய அமைச்சரவையின் பொருளாதார விவகாரங்கள் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.920 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்தின் முதல் கட்டத்தில், வானிலை முன்னறிவிப்பு முறைகள் நவீனப்படுத்தப்படும்.
இந்த முதல் கட்டத்தில் ஒரு பகுதியாக ரூ.208 கோடி மதிப்பீட்டில் வானிலை ஆய்வு மையங்களின் கருவிகள் நவீனப்படுத்தப்படும்.
இந்திய வானிலை ஆய்வு மையங்களை நவீனப்படுத்தும் திட்டத்தின் முதல் கட்டத்தில் பின்வரும் பகுதிகள் அடங்கியுள்ளன:
1. நிலையான அடிப்படையில் வானிலை ஆய்வு மையங்களின் நிர்வாகத் திறனை மேம்படுத்துதல்.
2. வேளாண் ஆலோசகர்கள், பேரிடர் மேலாண்மை அலுவலர்கள், உழவர்கள் ஆகியோரின் பயன்பாட்டுக்காக மாவட்ட வாரியாக வானிலை முன்னறிவிப்பு கருவிகளை அமைத்தல்.
3. கூடுதல் வருவாயைப் பெருக்கும் வகையில் நீரியல் ஆய்வுகள், மின் உற்பத்தி, வேளாண்மை, சுற்றுலா, விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில் கூடுதல் சேவைகளை வழங்குவது.
4. குளிர் காற்று, அனல் காற்று, சுழற் காற்று, பெரும் மழை, புழுதிப் புயல், இடியுடன் மழை போன்ற வானிலை மாற்றங்களை இன்னும் துல்லியமாக கணித்து எச்சரித்தல்.
5. காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்களின் போக்கை இன்னும் துல்லியமாக கவனித்து மழை பொழியும் விவரங்களை அறிவித்தல்.