குஜராத்: முதல்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!
Webdunia
செவ்வாய், 11 டிசம்பர் 2007 (11:45 IST)
குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில், ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரங்கள் முடிந்துள்ள நிலையில், முதற்கட்டமாக 87 தொகுதிகளில் இன்று வாக்குப் பதிவு தொடங்கியது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு டிசம்பர் 11, 16 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடக்க உள்ளது. இன்று முதல் கட்டமாக தெற்கு குஜராத், கட்ச், செளராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் உள்ள 87 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடக்கிறது.
பா.ஜ.க. 87 தொகுதிகளிலும் போட்டியிடும் வேளையில், காங்கிரஸ் 82 தொகுதிகளிலும் அதன் கூட்டணிக் கட்சிகள் 5 இடங்களிலும் போட்டியிடுகின்றன. பெண் வேட்பாளர்கள் 53 பேர் களத்தில் உள்ளனர்.
தேர்தலுக்காக 19,924 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 4,834 சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என்றும், 1,306 சாவடிகள் மிகவும் பதற்றம் நிறைந்தவை என்றும் கண்டறியப்பட்டுள்ளன. எல்லா வாக்குச் சாவடிகளிலும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
முதல்கட்ட வாக்குப் பதிவை முன்னிட்டு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. உள்ளூர் காவலர்களுடன் மத்திய துணை ராணுவத்தினர் 52,000 பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.
வாக்குப் பதிவு பணிகளில் 1.2 லட்சம் மாநில அரசு ஊழியர்களும், தேர்தல் பார்வையாளர் பணியில் 3,397 மத்திய அரசு ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டாம் கட்டமாக மீதமுள்ள 92 தொகுதிகளுக்கு வருகிற 16 ஆம் தேதி வாக்குப் பதிவு நடக்கும். குஜராத் தேர்தலில் மொத்தம் 669 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.