அணு சக்தி ஒப்பந்தம் கெளரவமானது : பிரதமர்!

Webdunia

வெள்ளி, 7 டிசம்பர் 2007 (18:56 IST)
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் கெளரவமானது என்பது மட்டுமின்றி, நமது நாட்டின் மின் சக்தித் தேவையை நிறைவு செய்வதற்கான தொழில்நுட்பத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்துவதாகும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்!

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை துவக்கிய பிரதமர் மன்மோகன் சிங் இன்று சூரத் நகரில் செய்தியாளர்களிடம் பேசும் போது இவ்வாறு கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் எந்த அளவிற்கு உள்ளது. அது நிறைவேறுமா? என்று செய்தியாளர்கள் வினவியதற்கு, இந்தியாவிற்கென்று தனித்த கண்காணிப்பு உடன்படிக்கையை சர்வதேச அணு சக்தி முகமையுடன் ஏற்படுத்திக் கொள்வதிலும், அணு தொழில்நுட்ப நாடுகள் குழுவின் ஒப்புதலைப் பெறுவதற்கும் நீண்டதூரம் உள்ளது என்று பதிலளித்த பிரதமர், சில கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேறும் என்று கூறினார்.

"எனக்கு மக்கள் மீது நம்பிக்கை உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் நலம் பயக்கும் அம்சங்கள் குறித்த அவர்களின் அறிதல் நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே அவர்கள் ஒப்பந்தத்திற்கு சாதகமான முடிவிற்கு வருவார்கள்" என்று பிரதமர் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்