என்கவுண்டர் பேச்சு : நரேந்திர மோடிக்கு தேர்தல் ஆணையம் தாக்கீது!
வியாழன், 6 டிசம்பர் 2007 (22:55 IST)
காவல் துறையின் போலி என்கவுண்டரில் சோராபுதீன் ஷேக் சுட்டுக்கொல்லப்பட்டதை நியாயப்படுத்திப் பேசியதற்கு விளக்கமளிக்குமாறு கோரி குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடிக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
நரேந்திர மோடியின் பேச்சு மத வெறுப்புணர்ச்சியை தூண்டுவதாகவும், சமூக பதற்றத்தை உருவாக்குவதகவும் உள்ளதெனவும், அது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் கூறி, அதற்கு வரும் சனிக்கிழமைக்குள் பதிலளிக்குமாறு கோரி தலைமைத் தேர்தல் ஆணையம் தாக்கீது அனுப்பியுள்ளது.
“வாக்குகளைப் பெறுவதற்காக மதம் மற்றும் சாதி அடிப்படையில் பிரச்சாரம் செய்வது தேர்தல் மாதிரி நடத்தை விதிமுறைகளை மீறிவதாகும்” என்று கூறி தேர்தல் ஆணையம் இத்தாக்கீதை அனுப்பியுள்ளது.
நரேந்திர மோடி பேசியது குறித்து வந்த புகார்களின் அடிப்படையிலும், அவருடைய பேச்சு குறித்த வீடியோ ஆதாரங்களையும் முழுமையாக ஆராய்ந்த பின்னரே இத்தாக்கீதை அனுப்பியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நரேந்திர மோடி தனது பேச்சிற்கு மன்னிப்பு கேட்கவில்லையென்றால் இதற்கு மேல் வாதாட மாட்டேன் என்று போலி என்கவுண்டர் தொடர்பான வழக்கில் குஜராத் அரசிற்காக உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகி வாதிட்டுவரும் மூத்த வழக்கறிஞர் கே.டி.எஸ். துளசி எச்சரித்திருந்த நிலையில், மேலும் ஒரு நெருக்கடியாக தேர்தல் ஆணையமும் தாக்கீது அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.