அம்பேத்கர் நினைவு தினம் : பிரதமர், தலைவர்கள் அஞ்சலி!
வியாழன், 6 டிசம்பர் 2007 (22:20 IST)
இந்திய சமூக விடுதலையின் முன்னோடிகளில் ஒருவரும், இந்திய அரசமைப்புச் சட்டத்தை முன்னின்று உருவாக்கியவருமான பாபா சாஹேப் டாக்டர் அம்பேத்கரின் 52வது நினைவு நாளான இன்று அவருக்கு குடியரசுத் துணைத் தலைவரும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்றத்திலுள்ள அம்பேத்கரின் சிலைக்கு கு. து. தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தமிழகத் தலைநகர் சென்னையில், கோயம்பேட்டிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல் திருமாவளவன், அவ்வமைப்பைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செலவப்பெருந்தகை, ரவிக்குமார் ஆகியோர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் கட்சித் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
சென்னை துறைமுகம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள அம்பேத்கரின் சிலைக்கு ஏராளமானவர்கள் மலர் மாலையிட்டு அஞ்சலி செலுத்தினர்.