மலேசிய இந்தியர்களின் உரிமையை காப்பது இந்தியாவின் மானசீக கடமை - அத்வானி!

Webdunia

வியாழன், 6 டிசம்பர் 2007 (20:19 IST)
மலேசிய சமூகத்தில் சம உரிமை, சம வாய்ப்பிற்காக போராடி வரும் மலேசிய இந்தியர்களின் உரிமைக்காக நடவடிக்கை எடுக்க வேண்டியது இந்தியாவின் மானசீக கடமை என்று அத்வானி கூறியுள்ளார்!

இந்தியா வந்துள்ள மலேசிய இந்தியர்கள் உரிமை முன்னணியின் தலைவரும், வழக்கறிஞருமான பி. வேதமூர்த்தி இன்று அத்வானி, விஜயகுமார் மல்ஹோத்ரா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வேதமூர்த்தி, இந்திய வம்சாவழியினருக்கு தங்களது சக்திக்கு உட்பட்ட அனைத்து உதவிகளையும் பாரதிய ஜனதா செய்யும், மலேசிய இந்தியர்களின் உரிமையை மீட்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது இந்தியாவின் மானசீக கடமை என்றும் கூறியதாகத் தெரிவித்தார்.

இது மலேசியாவின் உள்நாட்டுப் பிரச்சனை என்று போலி மதவாத சக்திகள் நெருக்கடி அளித்தால் அதனைக் காரணம் காட்டி தங்களுடைய பொறுப்பை மத்திய அரசு குறைத்துக் கொள்ளக்கூடாது என்றும் அத்வானி கூறியதாக வேதமூர்த்தி கூறியுள்ளார்.

இந்துக்களின் கண்ணியத்தையும், சுய மரியாதையையும் குறைக்கும் வகையில் மலேசிய அரசு செயல்பட்டு வந்திருப்பதாக தங்களிடம் வேதமூர்த்தி தெரிவித்தார் என்று செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க.வின் நாடாளுமன்ற கட்சியின் துணைத் தலைவர் விஜயகுமார் மல்ஹோத்ரா கூறினார்.

இதற்கிடையே, சிங்கப்பூர் அமைச்சர் மென்ட்டர், மூத்த அரசியல் தலைவர் லீக்குவாங் யூ ஆகியோரும் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அத்வானியைச் சந்தித்துப் பேசினர்.

மலேசியாவில் இந்துக்கள் மட்டுமின்றி, புத்த, தாவோ, கிறித்தவ மதத்தினரையும் மலேசிய அரசு பாகுபாடுடன் நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்