அமெரிக்காவுடனான "123"அணுசக்தி ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு நன்மை தரும் என்பதால் வரவேற்பதாக மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் கனிமொழி தனது கன்னிப் பேச்சில் குறிப்பிட்டார்.
2020 ஆம் ஆண்டில் சீனா அணு மின்நிலையங்களின் மூலம் 40000 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரத்தை தயாரிப்பதற்கு ஏற்பாடுகளை செய்து வருகிறது. நமக்கு 2020 ஆம் ஆண்டு வாக்கில் 20000 மெகா வாட் அணு உலைகள் மூலம் மின்உற்பத்தி செய்ய வேண்டுமென்கின்ற திட்டமிருக்கிறது. இந்த 123 ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், அந்த நிலையை எய்துவது கடினம்.
நமது நாட்டிலேயே உற்பத்தியாகும் தோரியத்தைப் பயன்படுத்தி, மின் உற்பத்தி செய்யலாம். ஆனால், அதற்குப் பல காலம் பிடிக்கும்.
அரசியல் மற்றும் ராணுவம் சார்ந்த பிரச்னைகள் தவிர சுற்றுச்சூழல் பிரச்னைகளும் இதில் அடங்கியுள்ளன. எரிசக்தியில் ஏறத்தாழ 85 சதவிகிதம் நிலக்கரி எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் மூலமாகத்தான் உற்பத்தியாகிறது. இந்த பொருள்களை எரிப்பதன் மூலம் ஆண்டொன்றுக்கு 23 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடை நாம் நமது வாயு மண்டலத்திற்கு அனுப்பி வைக்கிறோம். அதாவது, வினாடிக்கு 730 டன் என்ற அளவில் கார்பன்-டை-ஆக்சைடு வெளியாகிறது.
அணுமின் நிலையங்கள் ஆபத்தானவை என்கிற கருத்தும் வாதமாக வைக்கப்படுகிறது. கடந்த 50 ஆண்டுகளில் அணுமின் உற்பத்தி நிலையங்களின் விபத்துகள் நிலக்கரி சுரங்கங்களில் ஏற்பட்ட விபத்துக்களைக் காட்டிலும் மிகக்குறைவான உயிரிழப்புக்களையே ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த 123 ஒப்பந்தம் ராணுவ நிர்மாணங்களையும் உள்நாட்டுத் தேவைகளையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கும் உரிமையை நமக்கு வழங்கியிருப்பதால், நம்முடைய பாதுகாப்புத் தேவைகளில் நாம் எந்தவிதமான சமாதானமும் செய்து கொள்ளத் தேவையில்லை.
இந்த 123 ஒப்பந்தம் இந்திய, அமெரிக்க உறவை உறுதி செய்திருந்தாலும், அணுசக்தி தொழில்நுட்ப வணிகத்தில் நாம் மற்ற நாடுகளோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வாய்ப்பிருக்கிறது. எனவே, இந்தியா அமெரிக்காவிடமிருந்து மட்டுமே அணுசக்தி தொழில்நுட்பத்தைத் பெறவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்பதை அரசாங்கம் இந்த அவைக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றார் கனிமொழி.