மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் அரசியல் தலைமைக் குழுக் கூட்டம் புது டெல்லியில் இன்று துவங்குகிறது.
இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு சர்வதேச அணுசக்தி முகமையுடன் நடத்திய பேச்சுவார்த்தை, இந்த ஒப்பந்தம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடந்து முடிந்துள்ள நிலையில் கட்சியின் அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து இக் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள கட்சியின் அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப்பட உள்ள அரசியல் தீர்மானங்கள் குறித்து இக்கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கருதப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். இந்த மாநாடு வரும் மார்ச் மாதம் கோயம்புத்தூரில் நடைபெறுகிறது.
இந்த மாநாட்டில் கட்சியின் மத்தியக்குழு, அரசியல் தலைமைக்குழு ஆகியவற்றுக்கான புதிய உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதுடன், பல்வேறு முக்கிய பிரச்சனைகளில் கட்சியின் நிலைபாடு குறித்தும் முடிவு செய்யப்படும்.
இன்றைய கூட்டத்தில், தஸ்லிமா நஸ்ரீன் விவகாரம், நந்திகிராம் பிரச்சனை ஆகியவை குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.