மலேசியத் தமிழர் பிரச்சனையில் நடவடிக்கை: மத்திய அரசு உறுதி!
Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (16:32 IST)
மலேசியாவில் தமிழர்கள் உள்ளிட்ட இந்திய வம்சாவழியினர் விவகாரம், தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு எதிராக மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகள் ஆகியவை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
மாநிலங்களவையில் இன்று பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் சுரேஷ் பச்செளரி, மலேசியாவில் உள்ள இந்திய வம்சாவழியினரின் பிரச்சனை குறித்து மத்திய அரசு கவலை கொண்டுள்ளது. இது தொடர்பாக தலையிட அயலுறவு அமைச்சகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
முன்னதாக, மலேசியாவில் இந்திய வம்சாவழியினருக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதலமைச்சர் கருணாநிதி எழுதிய கடிதம் தொடர்பாக மலேசிய அமைச்சர் தெரிவித்துள்ள கருத்துகளுக்கு மத்திய அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
தி.மு.க. உறுப்பினர் சண்முக சுந்தரம் உள்பட அவைக்கு நடுவில் கூடிய உறுப்பினர்கள், மலேசியாவின் உள்விவகாரத்தில் தலையிட்டு கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று முதலமைச்சர் கருணாநிதியைக் கேட்டுக் கொண்டதன் மூலம் மலேசிய அமைச்சர் நசீர் அஜீஸ் தனது எல்லையை மீறிவிட்டார் என்று குற்றம் சாற்றினர்.
பா.ஜ.க.வைச் சேர்ந்த எஸ்.எஸ்.அலுவாலியா, காங்கிரசைச் சேர்ந்த ஞானதேசிகன் உள்படப் பலர் மலேசியத் தூதருக்கு தாக்கீது அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர்.