அதிவேக ரயில்களை இயக்க 9 மாநிலங்கள் விருப்பம் : அமைச்சர் ஆர். வேலு!
Webdunia
வெள்ளி, 30 நவம்பர் 2007 (16:28 IST)
அதிவேக பயணிகள் ரயில்களை இயக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுசெய்ய தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்கள் விருப்பம் தெரிவித்துள்ளன என்று மத்திய ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு கூறினார்.
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்த அமைச்சர் ஆர். வேலு, அதிவேக ரயில்களை இயக்குவதற்கு தமிழகம், ஆந்திர பிரதேசம், கர்நாடகம், கேரளம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட 6 மாநிலங்களுடன், மராட்டியம், குஜராத், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களும் விருப்பம் தெரிவித்துள்ளன என்று கூறியுள்ளார்.
''அதிவேக ரயில்களை இயக்குவதற்காக தனிப்பட்ட இருப்புப் பாதைகளை அமைப்பது, திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு, நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்காக 12 மாநில அரசுகளை மத்திய ரயில்வே அமைச்சகம் தொடர்பு கொண்டுள்ளது.
இந்தத் திட்டம் இன்னும் தொடக்க நிலையில்தான் உள்ளது. இதைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறுகள் பற்றிய ஆய்வு விரைவல் தொடங்கப்பட்டு, 2 ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும்'' என்று அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார்.
மற்றொரு கேள்விக்கு பதிலளித்துள்ள அமைச்சர் வேலு, 3 அடுக்கு படுக்கை வசதியுள்ள பெட்டிகளில் படுக்கைகளின் எண்ணிக்கையை 72 ல் இருந்து 81 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பழைய பெட்டிகளில் மாற்றங்களைச் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. புதிதாக தயாரிக்கப்படும் பெட்டிகள் 84 படுக்கைகளுடன் உருவாக்கப்படுகின்றன என்று கூறியுள்ளார்.