''தனது அடுத்த ரயில்வே நிதிநிலை அறிக்கை சாதாரண மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் சிறப்பானதாக இருக்கும்'' என்று மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் உறுதி அளித்துள்ளார்.
மக்களவையில் நேற்று ரயில்வே நிதி ஒதுக்கீடு சட்டவரைவு மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்துக்கு பிறகு ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பதில் அளித்து பேசினார்.
அப்போது, ''எனது அடுத்த ரயில்வே நிதிநிலை அறிக்கை, நான் தாக்கல் செய்த முந்தைய ரயில்வே நிதிநிலை அறிக்கைகளை விட சிறப்பானதாகவும், சாதாரண மக்களின் தேவையை பூர்த்தி செய்வதாகவும் இருக்கும்.
தற்போது நடந்து வரும் ரயில்வே திட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். கட்சி பாகுபாடு பார்க்காமல், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிய எல்லா ரயில்வே திட்டங்களையும் நிறைவேற்றுவோம்'' என்று லாலு பிரசாத் உறுதியளித்தார்.
ரயில்வே ஊழியர்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உறுதியளித்த அமைச்சர் லாலு பிரசாத், நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த ரயில்வே துறையை லாபத்துடன் உபரி நிதி கொண்ட துறையாக மாற்றியது பற்றியும் விளக்கி கூறினார். அதற்காக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு நிர்வாக நிபுணர்கள் தன்னை பாராட்டி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
ரயில் பெட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல், நெரிசலான வழித்தடங்களில் கூடுதல் ரயில்களை இயக்குதல், கிழக்கு, மேற்கு சரக்கு ரயில் பாதை திட்டம் ஆகியவை பற்றியும் லாலு பிரசாத் விளக்கினார். அவரின் பதிலுரைக்குப் பிறகு ரயில்வே நிதிஒதுக்கீடு சட்ட முன்வடிவு வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது.