இந்தியாவின் முன்னணி பெட்ரோலிய நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ஓ.என்.ஜி.சி.) ராஜஸ்தான் மாநிலத்தில் இயற்கை எரியாயு கண்டுபிடித்திருப்பதாக அறிவித்துள்ளது.
டெல்லியில் நடைபெற்று வரும் 6வது பெட்ரோ இந்தியா 2007 கருத்தரங்கின் போது செய்தியாளர்களிடம் பேசிய இந்நிறுவனத்தின் இயக்குநர் (துரப்பணம்) டி.கே.பாண்டே செய்தியாளர்களிடம் கூறியதாவது.
ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சால்மர் பகுதியில் இயற்கை எரிவாயு கண்டு பிடித்துள்ளோம். இது இந்த பகுதியில் மூன்றாவது கண்டுபிடிப்பாகும். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் இங்கு கிடைக்கும் இயற்கை எரிவாயுவின் அளவு பற்றி முழுமையாக தெரிந்துவிடும்.
தற்போது கச்சா எண்ணெய் இயற்கை எரிவாயு துரப்பணம் செய்வதற்கு ஏலத்தின் மூலம் அனுமதி வழங்கப்படுகிறது. இந்த புதிய முறை வருவதற்கு முன்பே, இந்த பகுதியில் எங்கள் நிறுவனத்திற்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு தோண்டி எடுக்கும் அனுமதி முன்பே கொடுக்கப்பட்டது என்று பாண்டே கூறினார்.