உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியை மட்டுமே அலுவலக மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையின் இறுதி முடிவு மத்திய அரசிடம்தான் உள்ளது. நாங்கள் எல்லா மொழிகளையும் மதிக்கிறாம்' என்று மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி கூறியுள்ளார்.
மக்களவையில் இன்று உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் ஹிந்தியை மட்டுமே அலுவலக மொழியாகப் பயன்படுத்த வேண்டும் என்ற நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையை எதிர்த்து தமிழக உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்.
அவர்களை அமைதிப்படுத்தும் வகையில் பேசிய அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி, ''ஒவ்வொரு குழுவிற்கும், ஆணையத்திற்கும் பிரச்சனைகளை ஆராய்ந்து பரிந்துரைகளை அளிக்கும் உரிமை உள்ளது. அவற்றின் மீது இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது.
தமிழ், ஹிந்தி உள்பட எல்லா மொழிகளையும் நாங்கள் மதிக்கிறோம். பிரச்சனைக்குரிய பரிந்துரை தற்போது சட்ட ஆணையத்தின் ஆய்வில் உள்ளது. மத்திய அரசிடம் வரும்போது நல்ல முடிவு எடுக்கப்படும்'' என்றார்.
அமைச்சரின் இந்த பதிலுக்கு தி.மு.க.வைச் சேர்ந்த ஏ.கிருஷ்ணசாமி உள்ளிட்ட எல்லா தமிழக உறுப்பினர்களும் மேசைகளைத் தட்டி வரவேற்பளித்தனர்.