இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் நமது நாட்டை அமெரிக்காவின் தேச, சர்வதேச நோக்கங்களுக்கு அடிமைப்படுத்துவதாக உள்ளது என்றும், அதனை ஏற்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் அத்வானி கூறினார்!
மக்களவையில் விதி எண் 193ன் கீழ் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் குறித்து நடைபெற்று வரும் விவாதத்தில் கலந்துகொண்டு பேசிய அத்வானி, இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவை அணு ஆயுதப் பரவல் தடுப்பு உடன்படிக்கைக்குள் (என்.பி.டி.) இழுக்க அமெரிக்கா முயற்சிக்கிறது என்று கூறினார்.
தான் இவ்வாறு கூறுவதற்கு ஆதாரமாக அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்திய அமெரிக்க அயலுறவுத் துறையின் சார்புச் செயலர் நிக்கோலாஸ் பர்ன்ஸ், "இந்த அணு சக்தி ஒத்துழைப்பு இந்தியாவை என்.பி.டி.க்குள் கொண்டு வருகிறது. இது இதற்கு முன் இல்லாத நிலை" என்று கூறியதை சுட்டிக்காட்டினார்.
அணு ஆயுதப் பரவல் உடன்படிக்கைக்குள் இந்தியாவைக் கொண்டுவர வேண்டும் என்பதே அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மையப் பொருளாக உள்ளது என்று கூறிய அத்வானி, இந்த ஒப்பந்தம் நமது நாட்டை அமெரிக்காவின் சொந்த, சர்வதேச நலன்களுக்கு நம்மை அடிமைப்படுத்துவதாக உள்ளது என்று கூறினார்.
"இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் சம வாய்ப்பளித்து சம நிலையில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அமெரிக்கா முதன்மை நிலையிலும், அதற்கு கீழான நிலை இந்தியாவிற்கும் அளிக்கப்பட்டுள்ளது" என்று குற்றம் சாற்றிய அத்வானி, 4 காரணங்களுக்காக இந்த ஒப்பந்தத்தை எதிர்ப்பதாகக் கூறினார்.
1) இது நமது பாதுகாப்பிற்காக எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனை நடத்தும் உரிமையைப் பறிக்கிறது.
2) இந்த ஒப்பந்தம் சம நிலை கூட்டாளியாக இந்தியாவை ஏற்கவில்லை.
3) சர்வதேச அணு சக்தி முகமையின் கண்காணிப்பாளர்கள் என்ற போர்வையில் நமது அணு உலைகளைப் பார்வையிட அமெரிக்கர்கள் வரும் நிலை உள்ளது.
4) 123 ஒப்பந்தம் அணு சக்திக்காக நமது நாடு அடுத்த 40 ஆண்டுகளுக்கு அமெரிக்காவை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படுத்துகிறது.
என்று கூறினார்.
இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டு கையெழுத்திடும் நிலையை எட்டிடும் போது இந்தியா பின்வாங்கிவிட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தங்களிடம் தெரிவித்ததாக ஆங்கில நாளிதழ் ஒன்று தீட்டிய தலையங்கத்தை சுட்டிக்காட்டிய அத்வானி, அது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தங்களைப் பொறுத்தவரை 123 ஒப்பந்தம் ஏற்கத்ததக்கதல்ல என்றும், மீண்டும் தேச ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அமெரிக்காவுடன் மறு பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றும் அத்வானி கூறினார்.