குஜராத் விவகாரம்: மக்களவை தள்ளிவைப்பு!
Webdunia
வியாழன், 22 நவம்பர் 2007 (14:48 IST)
மக்களவையில் இன்று 2002ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரம் தொடர்பாக மார்க்சிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உறுப்பினர்கள் கேள்வி எழுப்புவதை பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாகக் கூட்டணி உறுப்பினர்கள் தடுக்க முயன்றதால் கடும் அமளி ஏற்பட்டது. இதனால் அவை நடவடிக்கைகளை மதியம் வரை மக்களவைத் தலைவர் தள்ளிவைத்தார்.
மக்களவையில் இன்று கேள்வி நேரம் முடிந்த பின்பு உணவு இடைவேளைக்கு முன்பு நேரமில்லா நேரம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது கடந்த 2002 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரங்களில் தற்போதைய முதல்வர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் சிலருக்கு உள்ள தொடர்பை செய்தி ஊடகம் ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டது தொடர்பாக ம.பு.க. விசாரணை நடத்த வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளத்தின் உறுப்பினர் தேவேந்திர பிரசாத் யாதவ் வலியுறுத்தினார்.
இதற்கு பா.ஜ.க., ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதே கருத்தை மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்ஜிலால் சுமன் ஆகியோரும் வலியுத்த அனுமதி கோரினர். அவர்களுக்கும் அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அனுமதியளித்தார்.
அப்போது, பா.ஜ.க. உள்ளிட்ட முற்போக்குக் கூட்டணி உறுப்பினர்கள் மீண்டும் எழுந்து நின்று கூச்சலிட்டு அமளியில் ஈடுபட்டனர். குஜராத் கலவர விவகாரம் மிகப் பழையது என்று கூறியதுடன், ரத்த வங்கிகளில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக விவாதிக்க முதலில் அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.
இதனால் அவையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது. இதையடுத்து அவையை உணவு இடைவேளை வரை தள்ளி வைத்து அவைத் தலைவர் உத்தரவிட்டார்.