'சிதிர்' புயல்: 7 மாநிலங்களுக்கு எச்சரிக்கை!
Webdunia
வெள்ளி, 16 நவம்பர் 2007 (17:27 IST)
'சிதிர்' புயல் வலுவிழந்து கரையைக் கடந்து விட்டாலும் கூட அடுத்த 24 மணி நேரத்திற்கு எச்சரிக்கையாக இருக்குமாறு மேற்கு வங்காளம், ஒரிசா, திரிபுரா, மிசோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேகாலயா ஆகிய 7 மாநிலங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேற்கண்ட மாநிலங்களின் தலைமைச் செயலர்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள செய்தியில், ''மேற்குவங்க மாநிலத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மணிக்கு 50 முதல் 60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசும் அபாயமும் உள்ளது.
ஒரிசாவில் வடக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடல்சீற்றம் அதிகமாக இருக்கும். எனவே, அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்ல வேண்டாம்.
இதேபோல மேகாலயா, வடக்கு அஸ்ஸாம், மணிப்பூர், மிசோரம், திரிபுராவில் மணிக்கு 60 முதல் 90 கி.மீ வேகத்தில் காற்று வீசும். அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.