இந்தியாவின் கிரயோஜனிக் சோதனை முழு வெற்றி

Webdunia

வெள்ளி, 16 நவம்பர் 2007 (10:57 IST)
புவி மைய சுழற்சிப் பாதையில் செயற்கைக் கோளை செலுத்தவல்ல ஜிஎஸ்எல்வி விண்கலத்தை இறுதிக் கட்டத்தில் இயக்கக் கூடிய கிரயோஜனிக் எஞ்ஜின் சோதனை முழு வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாட்டின் மகேந்திரகிரியில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வுக் கழகத்தின் (இஸ்ரோ) சோதனை மையத்தில் முழுக்க முழுக்க நமது உள்நாட்டு தொழில்நுட்பத் திறனைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட கிரயோஜனிக் எஞ்ஜின், 720 நொடிகள் தொடர்ந்து இயக்கப்பட்டு சோதிக்கப்பட்டது. இந்த சோதனை முழுமையாக வெற்றி பெற்றுள்ளதாக இஸ்ரோ வெளியிட்ட செய்திக் குறிப்புத் தெரிவிக்கிறது.

கிரயோஜனிக் அப்பர் ஸ்டேஜ் என்று அழைக்கப்படும் இவ்வமைப்பு, ஜிஎஸ்.எல்.வி. விண்கலத்தின் 4வது கட்டத்தில் பொருத்தப்பட்டு அதுவே செயற்கைக் கோளை அதன் சுழற்சிப்பாதையில் செலுத்தும் வரை இயங்கக் கூடியதாகும். இதுவரை இந்தியா செலுத்திய ஜி.எஸ்.எல்.வி. விண்கலங்கள் அனைத்திலும் ரஷ்யாவில் இருந்து பெறப்பட்ட கிரயோஜனிக் எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டது,

திரவ எரிபொருளைக் கொண்டு இயங்கும் கிரயோஜனிக் எஞ்ஜினை உள்நாட்டிலேயே தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்த இஸ்ரோ, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ஆம் தேதி 450 விநாடிகள் இயக்கி சோதித்தது. அந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது.

அதனைத் தொடர்ந்து இறுதி சோதனைக்கு நாள் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் அன்று சோதனை நடைபெறவில்லை. நேற்று அந்த சோதனை கிரயோஜனிக் எஞ்ஜின் இயங்க வேண்டிய முழு நேர அளவான 720 நொடிகளுக்கு இயக்கப்பட்டது. அந்த சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளது.

இந்தியா உருவாக்கியுள்ள இந்த கிரயோஜனிக் எஞ்ஜின், 69.5 KN உந்துதலைப் தரக்கூடியதாகும். திரவ ஆக்ஸிஜன் (LOX), திரவ ஹைட்ரஜன் (LH2) ஆகியவற்றை எரிபொருளாகக் கொண்டு கிரயோஜனிக் எஞ்ஜின் ஒரு நிமிடத்திற்கு 39,000 முறை சுழலக் கூடிய திறன் வாய்ந்தது.

இந்தியா உருவாக்கியுள்ள இந்த கிரயோஜனிக் எஞ்ஜின், அடுத்த ஆண்டு இஸ்ரோ செலுத்த உள்ள ஜி.எஸ்.எல்.வி.-டி3 விண்கலத்தில் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படும்.

வெப்துனியாவைப் படிக்கவும்