ஒரிசாவை நோக்கி நகருகிறது புயல் சின்னம்!
Webdunia
புதன், 14 நவம்பர் 2007 (18:03 IST)
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள புயல் சின்னத்தைத் தொடர்ந்து ஒரிசா மாநிலத்தின் கடலோர பகுதிகள் முழுஉஷார் நிலை படுத்தப்பட்டுள்ளது.
ஒரிசா மாநில மையப் பகுதியிலிருந்து 850 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டு உள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், இப்புயல்சின்னம் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருவதாகவும் கூறியுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர். கடலுக்குள் சென்ற மீனவர்கள் கரைக்குத் திரும்பும் படி அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
இந்த புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வடக்கு, வட மேற்காக நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோபால்பூர், பிரதீப் துறைமுகங்களுக்கும் எச்சரிக்கை அனுப்பியுள்ளோம் என்று புவனேஸ்வர் வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.சி.சாகு கூறியுள்ளார்.
ஒரிசா மாநிலத்தின் 30 மாவட்டங்களும் முழு உஷார்நிலை படுத்தப்பட்டுள்ளது. கடலோர மாவட்டங்களான பாலசோர், கேந்திரபாடா, பாத்ரக், பூரி, கஞ்சம், ஐகத்சிங்பூர் ஆகிய மாவட்டங்களில் கூடுதல் உஷார்நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட வருவாய்த்துறை ஆணையர்கள் உஷார் படுத்தப் பட்டுள்ளனர் என்றும், தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பார்கள் என்றும், கண்காணிப்பு கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் இயங்கும் என்று அம்மாநில சிறப்பு நிவாரண ஆணையாளர் என்.கே.சுந்த்ரே தெரிவித்துள்ளார்.
நிலைமையை எதிர்கொள்ள முழுவீச்சில் தயாராகி இருப்பதாக தெரிவித்த அவர், தேசிய பேரிடர் மேலாண்மை துறை அதிகாரிகளுடன் அண்மையில் மேற்கொண்ட மாதிரி பயிற்சி உதவும் என்று கூறினார்.