காட்டுத் தீயை கட்டுப்படுத்த வேண்டும்: வல்லுநர்கள்!
செவ்வாய், 13 நவம்பர் 2007 (21:17 IST)
கோடை காலத்தில் உலகெங்கும் பரவுகின்ற காட்டுத் தீயை நவீனத் தொழில்நுட்பங்கள் மூலம் கண்காணித்துக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வல்லுநர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
உலகம் வெப்பமயமாதல் நிகழ்வுக்கு முக்கியக் காரணமான பசுமை இல்ல வாயுக்கள் காட்டுத் தீ ஏற்படும்போது அதிக அளவில் வெளியாகின்றன. இதனால் பருவநிலை மாற்றத்தில் அதிக பாதிப்பு ஏற்படுகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகம் நடத்தும் காட்டுத் தீ பற்றிய தேசியக் கருத்தரங்கு புதுடெல்லியில் இன்று தொடங்கியது.
இதில் புகழ்பெற்ற வனவியல் வல்லுநரும், சத்தீஷ்கர் மாநிலத் திட்ட வாரியத்தின் துணைத் தலைவருமான டி.என்.திவாரி உள்படப் பலர் பங்கேற்றுத் தங்களின் ஆய்வு முடிவுகளையும், கருத்துகளையும் முன் வைத்தனர்.
கருத்தரங்கில் பேசிய திவாரி, நமது நாட்டில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான காரணங்களைக் கண்டறிவதற்குத் தேவையான தகவல்கள் நம்மிடம் இல்லை. எனவே தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடிவதில்லை என்றார்.
''காட்டுத் தீ உருவாகும் காரணங்களைக் கண்டறிவதில் உள்ளூர் மக்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அவர்களுக்குத் தெரிந்த தகவல்களைத் திரட்டும் முயற்சிகளை எடுக்க வேண்டும்.
தெற்காசியாவில் காட்டுத் தீ பற்றிய தகவல் தொடர்பை ஏற்படுத்துவது மிகவும் அவசியம். தேவைப்பட்டால் தேசிய அளவில் காட்டுத் தீயைக் கண்காணிக்கவும், தடுக்கவும் ஆணையம் ஒன்றையும் அமைக்க வேண்டும்.
செயற்கைக் கோள் துணையுடன் இயங்கும் கண்காணிப்புக் கருவிகளுடன் முன்னெச்சரிக்கை அமைப்பை நிறுவ வேண்டும். சீனாவில் பரவலாகப் பயன்படுத்துவதைப் போல விமானங்களையும் பயன்படுத்தலாம்.
பாதிப்பு அதிகமாக ஏற்படும் பகுதிகளில் செயற்கையான நீர் தேக்கங்களை உருவாக்க வேண்டும். தடுப்பணைகளையும் கட்டலாம்'' என்றார் திவாரி.
கருத்தரங்கைத் தொடக்கி வைத்துப் பேசிய மத்திய சுற்றுச்சூழல் இணையமைச்சர் எஸ்.ரகுபதி, பருவ நிலையைப் பாதுகாக்க காடுகள் மிகவும் அவசியமானது என்பதை வலியுறுத்தினார்.
''ஆண்டுதோரும் உலகம் முழுவதும் 350 மில்லியன் ஹெக்டேர் காடுகள் காட்டுத் தீயினால் அழிகின்றன. இந்தியாவில் காட்டுத் தீயினால் அதிகம் பாதிப்பில்லை என்றாலும், தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்'' என்றும் ரகுபதி தெரிவித்தார்.