நந்திகிராம் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்: எல்.கே.அத்வானி!
Webdunia
செவ்வாய், 13 நவம்பர் 2007 (14:32 IST)
நந்திகிராமில் நடைபெற்றுள்ள வன்முறைகள் அதிர்ச்சியளிக்கிறது, இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம் என்றுபா.ஜ.க. வின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி கூறினார்.
மேற்கு வங்க மாநிலம் நந்திகிராமில் வன்முறை நடைபெற்ற இடங்களை பா.ஜ.க. தலைமையிலான தேசிய முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள் இன்று பார்வையிட்டு வருகின்றனர்.
வன்முறையினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளிலும், பள்ளிகளிலும் தங்கியிருக்கும் மக்களையும் சந்தித்து விசாரணை நடத்தப் போவதாக அவர்கள் கூறினர்.
முன்னதாக கொல்கத்தா விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த எல்.கே.அத்வானி, ''அணுசக்தி ஒப்பந்தம் பற்றி விவாதம் நடத்துவது முக்கியம்தான். நந்திகிராமில் அப்பாவி உழவர்கள் பாதிக்கப்பட்டுள்ள விவகாரம் பற்றி விவாதம் நடத்துவது அதைவிட முக்கியம்'' என்றார்.
''நத்திகிராமில் நடைபெற்றுள்ள வன்முறைகள் கடும் அதிர்ச்சியைத் தந்துள்ளன. மார்க்சிஸ்ட்டுகள் சர்வதேச விடயங்களையும், அணுசக்தி ஒப்பந்தம் போன்ற முக்கிய விவகாரங்கள் பற்றியும் விமர்சனம் தெரிவிக்கின்றனர். ஆனால் அவர்கள் ஆளும் மாநிலத்தில் உள்ள சிக்கல் பற்றிக் கவலைப்படவில்லை.
மேற்குவங்காளத்தில் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா தலைமையில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு நந்திகிராம் உழவர்களை அவமானப்படுத்தியதுடன், இந்தியக் குடியரசையும் அவமானப்படுத்திவிட்டது'' என்று அத்வானி கூறினார்.
''பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மத்திய அமைச்சர்களும் வரவில்லை, மாநில முதல்வரும் வரவில்லை. பாதிக்கப்பட்ட மக்களிடம் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மாநில ஆளுநரிடம் நாங்கள் தாக்கல் செய்வோம்'' என்றும் அத்வானி கூறினார்.
சமூகசேவகி மேதா பட்கரையே அனுமதிக்காத நந்திகிராம் மக்களிடம் நீங்கள் விசாரணை நடத்த முடியுமா என்று கேட்டதற்கு, முடியும் என்று நம்புகிறோம் என்றார் அத்வானி.