அணுசக்தி ஒப்பந்தத்தில் இறுதி முடிவு: பா.ஜ.க ஆலோசனை!
Webdunia
புதன், 7 நவம்பர் 2007 (16:59 IST)
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் தங்களின் நிலைகுறித்து இறுதி முடிவை எடுப்பதற்காக பா.ஜ.கவின் உயர்மட்டத் தலைவர்கள் இன்று கூடி விவாதித்தனர்.
புதுடெல்லியில் அக்கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எல்.கே.அத்வானி வீட்டில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ராஜ்நாத் சிங், வெங்கையா நாயுடு ஆகியோர் விரிவான கருத்துகளை முன்வைத்துள்ளனர்.
கடந்தவாரம் அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்காவின் நிலைபற்றி அந்நாட்டுத் தூதர் டேவிட் முல்போர்டு, பா.ஜகவின் மூத்த தலைவர்களைச் சந்தித்து விரிவாக விளக்கினார். இதற்கிடையில் மற்ற கட்சிகளின் தலைவர்களும் தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.
இந்த இருநிகழ்வுகளின் முக்கியத்துவத்தையும் மற்ற தலைவர்களிடம் எல்.கே.அத்வானி எடுத்துக் கூறினார் என்று பா.ஜ.கவில் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டேவிட் முல்போர்டு தவிற தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், அணுசக்தி ஆணையத் தலைவர் அணில் ககோட்கர் ஆகியோரும் அத்வானியைச் சந்தித்து அணுசக்தி ஒப்பந்தத்தின் பாதுகாப்பு தன்மை, அறிவியல் தன்மைகள் குறித்து விளக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் வரவுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அணுசக்தி ஒப்பந்தவிவகாரம் முக்கிய விவாதப் பொருளாக வைக்கப்படவுள்ள சூழலில் பா.ஜ.க தலைவர்களின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.