போபர்ஸ் வழக்கை கையாள்வது கடினமானது : நீதிபதி சோதி!

Webdunia

செவ்வாய், 6 நவம்பர் 2007 (14:03 IST)
ஜெசிக்கா லால், பிரியதர்ஷனி மாட்டு கொலை வழக்குகளை விசாரித்து தீர்ப்பளித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ். சோதி, தான் கையாண்ட வழக்குகளில் போபர்ஸ் பீரங்கி பேர வழக்கே மிகக் கடினமானதாக இருந்தது என்று கூறியுள்ளார்!

உயர் நீதிமன்ற நீதிபதியாக கடந்த 8 ஆண்டுகாலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் நீதிபதி சோதி நாளை ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய நீதிபதி சோதி, போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்த இந்துஜா சகோதரர்களை வழக்கிலிருந்து விடுவித்து தான் அளித்த தீப்பிற்காக மிகக் கடுமையாகப் பணியாற்றியதாகக் கூறியுள்ளார்.

இந்துஜா சகோதரர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்னர் அதற்கான முன் ஒப்புதலை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் இருந்து மத்திய புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) பெறத் தவறிவிட்டது என்று கூறி 2002 ஆம் ஆண்டு மே 31 ஆம் தேதி ம.பு.க.வின் குற்றப்பத்திரிக்கையை நிராகரித்து நீதிபதி சோதி தீர்ப்பளித்தார்.

போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு தொடர்பாக ம.பு.க. சமர்பித்த ஏராளமான ஆவணங்களை தான் பரிசீலிக்க வேண்டியதாக இருந்தது என்றும், அதில் சில சுவீடனில் இருந்து பெறப்பட்டது என்றும் கூறியுள்ளார்.

நீதிபதியாக தான் பணியாற்றிய காலத்தில் எந்தவொரு வழக்கையும் முதலில் ஒரு மனிதனாகத்தான் அதைப் பார்த்ததாகவும், ஒரு நீதிபதியாக பார்க்கவில்லை என்று கூறிய சோதி, ஓய்வு பெற்றதற்குப் பிறகு உச்ச நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குகளை எடுத்தாளும் வழக்கறிஞராகப் பணியாற்றப் போவதாகக் கூறியுள்ளார்.

மாடல் அழகி ஜெசிக்கா லால், பிரியதர்ஷனி மாட்டு ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட வழக்குகளில் மத்திய, மாநில அரசுகளில் செல்வாக்குடன் திகழ்ந்த அரசியல்வாதிகளின் பின்னணி இருந்தும் அவற்றில் மிகச் சரியான தீர்ப்பை வழங்கி முத்திரையைப் பதித்தவர் சோதி என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்