மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான கே. கருணாகரனை மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் கொண்டு வருவது தொடர்பாக கேரள மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் மொஷினா கித்வாய் பேச்சு நடத்தவுள்ளார்!
கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான கே. கருணாகரனுக்கு என்று கேரள அரசியலில் ஓர் இடம் உண்டு. சோனியாகாந்தி வந்ததைத் தொடர்ந்து வெளியேறிய கருணாகரன் முதலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். பின்னர் தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் கேரள அரசியலில் எடுபடாமல் போனார். இருந்தாலும் கேரளாவைப் பொறுத்த வகையில் கருணாகரனுக்கு என்று ஓர் இடம் உள்ளது.
இந்நிலையில் கருணாகரனை காங்கிரஸ் கட்சிக்கு கொண்டு வருவது தொடர்பாக அம்மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளர் கித்வாய் இன்று திருவனந்தபுரம் புறப்பட்டுச் செல்கிறார். அடுத்த 3 நாட்களும் அங்கு தங்கியிருக்கும் கித்வாய் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்துகிறார்.
கருணாகரன் மீண்டும் காங்கிரசுக்கு வருவது குறித்து காங்கிரசில் ஒரு பிரிவினர் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான உம்மன் சாண்டி அம்மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரமேஷ் சென்னிதாலா உட்பட பல்வேறு தலைவர்களும் இதனை வரவேற்றுள்ளனர்.
இந்த பிரச்சனையில் கித்வாய் பேச்சு நடத்துவாதேயொழிய எந்தவித முடிவையும் வெளிப்படையாக கூறமுடியாது என்று கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சித் தலைவராக சோனியா காந்தியை தேர்ந்தெடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோது தீவிரமாக எதிர்த்து கருணாகரன், பின்னர் கருணாகரனை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் முடிவில்தான் உள்ளது என்று கூறப்படுகிறது.
இதனிடையே காங்கிரசுக்கு கருணாகரன் திரும்பப் போவதாக வெளியான தகவல் கேரள மாநில அரசியலில் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.