ம.பி. இடைத் தேர்தல் : பா.ஜ.க தோல்வி!

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (17:03 IST)
மத்திய பிரதேசத்தில் நடந்த இடைத் தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்தது.

மத்திய பிரதேச மாநிலம் லால்ஜி சட்டமன்ற தொகுதியின் உறுப்பினரும், அமைச்சருமான திலிப் பட்டாரி இறந்ததை தொடர்ந்து இடைத் தேர்தல் நடந்தது.

இதில் திரிப் பட்டாரி மனைவி தாரேஷ்வரி பட்டாரிசை ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனது வேட்பாளராக நிறுத்தியது.

இவரை எதிர்த்து சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ், ஜனதா, ராஷ்டிரிய சமந்தா கட்சி, உமா பாரதியின் பாரதிய ஜனசக்தி உட்பட 32 பேர் போட்டியிட்டனர். இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன.

சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்த கிஷோர் சமித்ரி, இவருக்கு அடுத்த படியாக வந்த பா.ஜ வேட்பாளரை விட 3734 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் 28,779 வாக்குகள் வாங்கியுள்ளார்.

பா.ஜ. வேட்பாளர் தாரேஷ்வரி பட்டாரி 25,045 வாக்குகள் பெற்று இரண்டாவதாக வந்தார். காங்கிரஸ் வேட்பாளர் பகவத் பாகு நாக்பூரி 11,738 வாக்குகள் பெற்று மூன்றாவதாக வந்தார்.

ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கன்கர் முன்ஜாரி 673 வாக்குகளும், ராஷ்டிரிய ஜனதா தள் சார்பில் போட்டியிட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுக்லால் குஷ்லாகா 1311 வாக்குகள் பெற்றார்.

உமா பாரதி கட்சியான பாரதிய ஜனசக்தி வேட்பாளர் புத்ரம் தேவகாடே 1096 வாக்குகள் பெற்றார். இதில் 17 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.

இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்ற கிஷோர் சமித்ரி (வயது 32) கடந்த எட்டு மாதத்திற்கு முன்பு சந்தை குத்தகைகாரர் கடத்தப்பட்டதற்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, கலவரத்தில் ஈடுபட்டதாகவும் பொருட்களை சூறையாடியதாகவும் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு சிறையிலடைக்கப்பட்டார். இவர் சிறையில் இருந்து கொண்டே இடைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்