கர்நாடகா - தாமதம் ஏன் ? பா.ஜ.க. கேள்வி

Webdunia

சனி, 3 நவம்பர் 2007 (11:28 IST)
கர்நாடகாவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கிக் கொள்வதற்கு மத்திய அமைச்சரவை முடிவு எடுக்காதது பற்றி பாரதிய ஜனதா கட்சி செய்தித் தொடர்பாளர் ரவி சங்கர் பிரசாத் குறை கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாரதிய ஜனதா கட்சியும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் மாநில ஆளுநர் ராமேஷ்வ‌ர் தாகூர் முன்பு தங்களுக்கு உள்ள பெரும்பான்மையை நிரூபித்து ஐந்து நாட்கள் ஆகி விட்டன. மத்திய அரசு எந்த முடிவும் எடு்க்கவில்லை.

2005 ஆம் ஆண்டு ‌பீகாரில் ஆட்சி கலைக்கப்பட்ட போது, மத்திய அரசு சுறுசுறுப்பாக செயல் பட்டது. அப்போது மாஸ்கோவிற்கு சென்று இருந்த குடியரசுத் தலைவரிடம் பேக்ஸ் மூலமாக, ‌பீகார் சட்டமன்றத்தை கலைப்பதற்கான அனுமதி பெறப்பட்டது. இவை எல்லாம் 12 மணி நேரத்தில் இரவோடு இரவாக செய்து முடிக்கப்பட்டது என்று கூறினார்.

அவரிடம் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சித் தலைவர் தேவகெளடா, பா.ஜ. தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பியுள்ள 21 நிபந்தனைகளுடன் கூடிய கடிதத்தை பற்றி கேட்டபோது, பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவுடன், 21 மாத்திற்கு முன்பு, குமாரசாமி தலைமையில் ஆட்சி அமைக்கும் போது ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டது. எப்படியிருப்பினும் இப்போது அனுப்பியுள்ள கடிதம், இரு கட்சிகளுக்கும் இடையில் உள்ள பிரச்சனை. இது புதிதாக அமையப்போகும் கூட்டணி அரசுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பதிலளித்தார்.

கர்நாடக மாநில பாரதிய ஜனதா மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர்களும், இந்த இரு கட்சிகளின் சட்டமன்ற கட்சித் தலைவர்களும், புதிய அரசு அமைப்பதற்கு தங்களது ஆதரவை ஆளுநரிடம் தெரிவித்து விட்டனர். இத்துடன் சட்டமன்ற உறுப்பினர்களும் புதிய அரசுக்கு தங்களின் ஆதரவை எழுத்து மூலமாக தனித்தனியாக கொடுத்துள்ளனர்.

இவை தவிர ஆளுநர் புதிய அரசு அழைப்பு விடுப்பதற்கு மற்ற நடைமுறைகளை பின்பற்ற தேவையில்லை என்று பா.ஜ.க. கூறியுள்ளது.

நேற்று நடந்த மத்திய அமை‌ச்சரவை கூட்டத்தில் கர்நாடக மாநில விவகாரம் குறித்து விவாதிக்கப்பட வில்லை எனவும். இது அமைச்சரவையின் அரசியல் விவகார‌க் குழு விவாதிக்க வேண்டிய விசயம் என்று மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரியர‌ஞ்ச‌ன் தாஸ் முன்ஷி தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்