மத்திய அரசும் இடதுசாரிகளும் திசைமாறிவிட்டனர் : பா.ஜ.க. குற்றச்சாற்று!
Webdunia
வெள்ளி, 2 நவம்பர் 2007 (15:33 IST)
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசும், இடதுசாரிகளும் திசைமாறி, வந்த வழியிலேயே திரும்பியுள்ளனர் என்று பா.ஐ.க தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாற்றியுள்ளார்.
ஜார்கண்டில் செய்தியாளர்களைச் சந்தித்த ராஜ்நாத் சிங், அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் சோனியா காந்தியும், இடதுசாரிக் கட்சிகளும் தங்களின் நிலைகளிலிருந்து திசைமாறி வந்த வழியிலேயே செல்கின்றனர். இதன் விளைவை நாடாளுமன்றக் கூட்டத் தொடரில்தான் பார்க்க வேண்டும் என்றார்.
வருகின்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரில் இடதுசாரிகள் நிச்சயமாகத் தங்களின் நிலையிலிருந்து பின்வாங்குவார்கள். அவர்கள் எப்போதுமே இரண்டு நிலைகளை எடுத்துப் பழக்கப்பட்டவர்கள்.
நமது நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலைகளை நாங்கள் கவனமாகக் கண்காணித்து வருகிறோம். சட்டம் ஒழுங்கு கடுமையான ஆபத்தில் உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தவறிவிட்டது என்றும் ராஜ்நாத் சிங் குற்றம்சாற்றினார்.
விரைவில் நாடாளுமன்றத்திற்கு இடைத்தேர்தல் வரும் என்று கூறிய ராஜ்நாத் சிங்கிடம், தேர்தல் தேதி பற்றிய எதிர்பார்ப்பைக் கேட்டதற்கு, “நான் ஒன்றும் ஜோதிடர் அல்ல” என்றார்.