பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு விசாரணை முடிந்தது! தீர்ப்பு தள்ளிவைப்பு!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (18:43 IST)
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., மருத்துவம் உள்ளிட்ட மத்திய அரசின் உயர் கல்விக் கூடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை முடிந்து இறுதித் தீர்ப்பிற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது!

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு சட்டம் வாக்கு வங்கி அரசியலை கருத்தில் கொண்டு நிறைவேற்றப்பட்டது என்று கூறி இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், நீதிபதிகள் அரிஜித் பசாயத், சி.கே. தாக்கர், ஆர்.வி. ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகியோர் கொண்ட அரசமைப்புக் குழு விசாரித்து வருகிறது.

இவ்வழக்கின் மீது மத்திய அரசின் சார்பாகவும், தமிழ்நாடு உள்ளிட்ட மாநில அரசுகளின் சார்பாகவும் ராஷ்ட்ரிய ஜனதாதளம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் சார்பாகவும் ஆஜரான வழக்கறிஞர்கள் உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவதை ஆதரித்து வாதிட்டனர்.

இட ஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் சார்பில் வழக்கறிஞர்கள் ஹரிஷ் சால்வே, கே.கே. வேணுகோபால் ஆகியோர் வாதிட்டனர்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் மண்டல் குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்பட்டது என்றும், அந்த அறிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் 11 பேர் கொண்ட அரசமைப்பு அமர்வு, மத்திய அரசு வேலை வாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் உத்தரவை ஆமோதித்து வழங்கப்பட்ட தீர்ப்பை சுட்டிக்காட்டி மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் ஜி.இ. வாகனவதியும், கூடுதல் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியமும் வாதிட்டனர்.

சாதி ரீதியிலான இட ஒதுக்கீடு சரியானது என்று கூறி தமிழக அரசின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் கே. பராசரண் வாதிட்டார். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ராம்ஜேத் மலானி, இந்த நாடு இந்த நாள் வரை மேல் சாதி மக்களால்தான் ஆளப்படுகிறது. அவர்களுடைய மேலாதிக்கமே இந்தியாவில் புறையோடியுள்ள ஊழலிற்கு காரணம் என்று கூறினார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் ரவிவர்மா குமார், இதர பிற்படுத்தப்பட்ட சாதியினரை புள்ளியல் ரீதியாக உறுதிபடுத்த சாதி அடிப்படையிலான மக்கட்தொகை கணக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டில் அந்த சமூகங்களில் உள்ள முன்னேறிய பிரிவினரை தவிர்த்துவிட வேண்டும் என்று இட ஒதுக்கீட்டை எதிர்த்து வாதிட்ட கே.கே. வேணுகோபால் கூறினார்.

இட ஒதுக்கீடு சாதியின் அடிப்படையில் இல்லாமல், பொருளாதார பிற்படுத்தப்பட்ட தன்மையை அடிப்படையாகக் கொண்டே நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று வாதிட்ட மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய அரசு தனது நிதியில் இருந்து நடத்தும் பொதுக் கல்வி நிலையங்களில் இட ஒதுக்கீடு செய்வது அரசமைப்புச் சட்டத்தின் 29 (2) பிரிவிற்கு எதிரானது என்று வாதிட்டார்.

இந்த விசாரணையின் போது இதர பிற்படுத்தப்பட்டோரில் உள்ள முன்னேறிய பிரிவினரை எவ்வாறு அடையாளம் காண்பீர்கள் என்ற கேள்வியை நீதிபதிகள் எழுப்பினர். அதுமட்டுமின்றி, இட ஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு நடைமுறையில் இருக்க வேண்டும் என்பதற்கு என்ன வரையறை உள்ளது என்றும் அரசிற்கு கேள்வி எழுப்பினர்.

வெப்துனியாவைப் படிக்கவும்