கச்சா எண்ணெய் விலை உயர்வு : அமைச்சர்கள் சந்திப்பு!

Webdunia

வியாழன், 1 நவம்பர் 2007 (18:19 IST)
சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்ஙளுக்கு ஏற்படும் நட்டத்தை குறைப்பது சம்பந்தமாக மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை தான் சந்தித்து பேசியதாக மத்திய பெட்ரோலித்துறை அமைச்சர் முரளி தியோரா தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி 1 பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 97 டாலராக இருந்தது. (இந்திய ரூபாயில் ரூ.3,448).

உலகத்தில் அதிகளவு பெட்ரோலிய கச்சா எண்ணெயை பயன்படுத்தும் அமெரிக்காவில் இதன் இருப்பு கடந்த வாரம் 39 லட்சம் பீப்பாயாக குறைந்தது. அத்துடன் அமெரிக்காவுக்கு குறிப்பிட்ட அளவு கச்சா எண்ணெய் விற்பனை செய்து வரும் மெக்ஸிகோவில் புயல் தாக்கியதால் கடந்த வாரம் உற்பத்தி குறைந்தது. இதனால் அமெரிக்கா மற்ற நாடுகளில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கியது.

அத்துடன் வடக்கு ஈராக்கில் உள்ள குர்திஸ் இன மக்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்காக, ஈராக்கிற்குள் படைகளை அனுப்புவதாக கூறியுள்ளது. இவர்கள் ஈராக்கில் இருந்து கொண்டு இத்தாலி மீது தாக்குதல் தொடுத்து வருகின்றனர். இதை கட்டுப்படுத்த ஈராக்கின் வட பகுதிக்குள் படைகளை அனுப்ப போவதாக இத்தாலி எச்சரித்துள்ளது.

ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக கூறி, அமெரிக்கா ஈரான் மீது படையெடுப்பு நடத்த திட்டமிட்டு வருகிறது. சென்ற வாரம் பொருளாதார தடையை அறிவித்தது.

(ஈராக்கில் உயிர் கொல்லி ஆயுதமும், அணு ஆயுதங்களும் இருப்பதாக கூறி அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பு நடத்தியது. இப்போது ஈராக்கில் எவ்வித ஆயுதங்களும் இல்லை என்று சர்வதேச அணுசக்தி ஏஜென்ஸி அறிவித்துள்ளது).

இதனால் பெட்ரோல் வளம் அதிகளவுள்ள மேற்கு ஆசியாவில் பதட்ட நிலை நீடிக்கிறது. இது போன்ற காரணங்களினால் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது. இந்த வருட இறுதிதக்குள் 1 பீப்பாய் 100 டாலரை எட்டிவிடும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இநத விலை உயர்வால் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. இதை தடுத்து நிறுத்த பெட்ரோல், டீசல், மண்ணென்னை, சமையல் எரிவாயு ஆகியவைகளின் விலையை அதிகரிக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று கோரி வருகின்றன.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் முன்னரே பெட்ரோல், டீசல், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மண்ணென்ணை, சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலையை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் இந்த நிதி ஆண்டில் ரூ.8,500 கோடி வரை நட்டம் ஏற்படும் என்ற கூறியுள்ளது.

இன்று நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை சந்தித்த பிறகு முரளி தியோரா, கச்சா எண்ணெய் விலை உயர்வால், பெட்ரோலிய நிறுவனங்களின் பிரச்சனையை தீர்ப்பதற்காக ஆலோசனை நடத்தினோம் என்று அவர் நிருபர்களிடம் தெரிவித்தார். மற்ற விபரங்கள் எதையும் தெரிவிக்கவில்லை.

பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் 1 லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.3.90 பைசா, 1 லிட்டர் டீசலுக்கு ரூ.6.22 பைசா, 1 லிட்டர் மண்ணென்ணைக்கு ரூ.15.99 பைசா, சமையில் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.174.17பைசா இழப்பை சந்தித்து வருகின்றன.

பெட்ரோலிய கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த நட்டம் மேலும் அதிரிக்கும் என்று கூறுகின்றன.

மத்திய அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரிக்க, இந்த நிறுவனங்களுக்கு அனுமதி கொடுத்து விட்டு, விலையை உயர்த்தாமலும் இருக்க முடியும்.

மத்திய அரசு விதிக்கும் இறக்குமதி வரி, உற்பத்தி வரி, மாநில அரசுகள் விதிக்கும் விற்பனை வரி ஆகியவற்றை குறைத்தால், பெட்ரோலிய பொருட்களின் நுகர்வோர்களுக்கான விலையை உயர்த்தாமலேயே, இந்நிறுவனங்களின் நட்டத்தை ஈடுகட்ட முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்