அணு சக்தி ஒப்பந்தம் முறிந்தால் இந்தியாவிற்கே இழப்பு : விஞ்ஞானி!

Webdunia

புதன், 31 அக்டோபர் 2007 (20:00 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் முறிந்தால் அதனால் அணு தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவிற்கு பெரும் இழப்பு ஏற்படும் என்று அணு சக்தித் துறையின் முன்னாள் தலைவர் விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன் கூறியுள்ளார்!

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் - இந்திய பொருளாதாரத்தின் அதன் தாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றிய எம்.ஆர். சீனிவாசன், அணு சக்தி உருவாக்கத் தேவையான எரிபொருளை நிரந்தரமாகப் பெறக்கூடிய வாய்ப்பையும், அணு சக்தி தொழில்நுட்பத்தை உலகளாவிய அளவில் பெற்று பயன்படுத்தும் நல்வாய்ப்பையும் இந்தியா இழக்க நேரிடும் என்று கூறினார்.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் முறிந்தால், அமெரிக்க அணு சக்தி தொழில்நுட்பம் நமக்கு கிட்டாமல் போவது மட்டுமின்றி, அணு சக்தி துறையில் ரஷ்யா, ·பிரான்ஸ் நாடுகளுடனும் ஏற்படக்கூடிய ஒத்துழைப்பை நாம் இழக்க நேரிடும் என்று கூறினார்.

தற்பொழுது தேச பாதுகாப்பு ஆலோசனை வாரியத்தின் உறுப்பினராக உள்ள விஞ்ஞானி எம்.ஆர். சீனிவாசன், அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்திற்கு அணுமதி அளித்து அமெரிக்க நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஹென்ரி ஹைட் சட்டம், நாம் எதிர்காலத்தில் அணு ஆயுதச் சோதனை நடத்தினால் ஒப்பந்த முறிவிற்கு வழிவகுக்கிறது என்பதையும், அது ஒரு அணு சக்தி ஒத்துழைப்பிற்கு எதிர்மறையானது என்றும் சீனிவாசன் கூறினார்.

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு அத்திட்டத்தின் கீழ் சர்வதேச கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்படும் அணு மின் உலைகளுக்கான தனித்த ஒப்பந்தத்தை சர்வதேச அணு சக்தி முகமையுடன் உருவாக்கினால் மட்டுமே ·பிரான்சுடன் விரிவான அளவிற்கு அணு சக்தி ஒத்துழைப்பை உறுதி செய்வது சாத்தியம் என்று சீனிவாசன் கூறினார்.

வெப்துனியாவைப் படிக்கவும்