கர்நாடக விவகாரம்: பிரதமரிடம் பா.ஜ.க தலைவர்கள் மனு!
Webdunia
புதன், 31 அக்டோபர் 2007 (13:15 IST)
கர்நாடகாவில் பா.ஜ.க தலைமையிலான பா.ஜ.க. - ம.ஜ.த கூட்டணி ஆட்சியமைக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு பிரதமரிடம் பா.ஜ.க தலைவர்கள் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.
பா.ஜ.கவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதுடெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்தனர்.
கர்நாடகாவில் பா.ஜ.க. - ம.ஜ.த கூட்டணி ஆட்சியமைக்க கோரிக்கை விடுத்து 4 நாட்களுக்கு மேலாகியும், ஆளுநர் ராமேஷ்வர் தாகூர் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க பரிந்துரை செய்யவில்லை என்று அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர்.
கர்நாடக சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 224 உறுப்பினர்களில் 129 பேர் பா.ஜ.க. - ம.ஜ.த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர் என்றாலும், சட்டப்பேரவையைக் கலைக்க வேண்டும் என்று காங்கிரஸ் விரும்புவது சரியல்ல என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
சுமார் 30 நிமிடங்கள் நிகழ்ந்த இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இத்தகவல்களைத் தெரிவித்தார்.
மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நீக்க வேண்டும் என்பதற்கு எந்தக் காலவரையறையும் இல்லை என்றும், அரசமைப்புச் சட்டத்தின்படி மத்திய அரசு முடிவு செய்யும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
இருந்தாலும், கர்நாடகத்தில் அரசமைக்கக் கோரும் கடிதத்தை எட்டியூரப்பா தலைமையிலான பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநரிடம் கொடுத்து 4 நாட்கள் ஆகிவிட்டது என்பதைப் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளோம் என்று வெங்கையா நாயுடு கூறினார்.