இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தலையற்ற கோழிகள் என்று தான் கூறியது நாடாளுமன்ற உறுப்பினர்களை எந்தவிதத்திலாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக தான் மன்னிப்புக் கோருவதாக மக்களவை உரிமைக் குழுவிடம் அமெரிக்காவிற்கான இந்தியத் தூதர் ரோனன் சென் கூறியுள்ளார்!
தி கிஷோர் சந்திர தேவ் தலைமையிலான மக்களவை உரிமைக் குழு முன்பு விசாரணைக்கு வந்த தூதர் ரோனன் சென், தான் கூறிய கருத்து சில ஊடகவியலாளர்களை குறிப்பிட்டது தானே தவிர, நாடாளுமன்ற உறுப்பினர்களை கருத்தில் கொண்டு கூறப்பட்டது அல்ல என்று கூறியுள்ளார்.
ரோனன் சென் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அறிக்கை தயாரிக்கப்பட்டு அது மக்களவைத் தலைவருக்கு அனுப்பப்படும். ரோனன் சென் மன்னிப்புக் கோரியது ஏற்கப்படும் என்று தெரிகிறது.
இந்திய நாடாளுமன்ற சரித்திரத்தில் அரசு தூதர் ஒருவர் உரிமைக் குழு முன்பு விசாரணைக்கு நின்றது இதுவே முதல் முறையாகும். வரும் நவம்பர் மாதம் 2 ஆம் தேதி மாநிலங்களவை உரிமைக் குழு முன்பு தனது வாக்குமூலத்தை அளிக்கவுள்ளார் ரோனன் சென்.