தீவிரவாதிகளின் விவரத் தொகுப்பை உருவாக்க சார்க் நாடுகள் முடிவு!
Webdunia
புதன், 24 அக்டோபர் 2007 (16:28 IST)
தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், இணைய தள குற்றங்கள், நிதி மோசடிகள் தொடர்பானவர்கள் பற்றிய விவரத் தொகுப்பை உருவாக்க சார்க் கூட்டமைப்பு நாடுகள் முடிவு செய்துள்ளன.
இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்க தேசம், பாகிஸ்தான், மாலத் தீவுகள், நேபாளம், பூட்டான் உள்ளிட்ட 8 நாடுகள் கூட்டைப்பான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு 3 நாள் டெல்லியில் நடைபெறுகிறது. முதல் நாளான இன்று உறுப்பு நாடுகளின் காவல்துறைத் தலைவர்கள் பங்கேற்றனர்.
இக் கூட்டத்தில் தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், இணைய தள குற்றங்கள், நிதி மோசடிகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.
எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை கட்டுப்டுத்த உறுப்பு நாடுகளின் காவல்துறையினரிடையே தகவல் பரிமாற்றம் செய்து கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது என உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
நாளை சார்க் நாடுகளின் உள்துறைச் செயலாளர்கள் மாநாடு நடைபெறுகிறது. இதில், மேற்கண்ட குற்றங்களை இனங்கண்டறிந்து, அவற்றை தடுப்பது மற்றும் தொடர்புடையவர்களை தண்டிக்க தேவைப்படும் சட்டத் திட்டங்கள், அவற்றை உருவாக்குவது, நடைமுறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும்.
இதனைத் தொடர்ந்து 25ஆம் தேதி சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெறுகிறது.
இதனிடையே சம்யுக்தா எக்ஸ்பிரஸ், மெக்கா மசூதி, அஜ்மீர் தர்கா, லூதியானா திரையரங்கு குண்டு வெடிப்பு ஆகியவற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானை தலைமையிடமாகக்கொண்டு செயல்படும் தீவிரவாத அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பது தெளிவாக தெரியவந்துள்ளது என்று உள்துறை இணை அமைச்சர் சிறிபிரகாஷ் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
மேலும் அந்த தீவிரவாதிகளை கைது செய்ய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானின் ஒத்துழைப்பை கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.