பிரதமர் நைஜீரியா செல்கிறார்!
Webdunia
சனி, 13 அக்டோபர் 2007 (12:24 IST)
பிரதமர் மன்மோகன் சிங், ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா, தென் ஆப்பிரிக்கா ஆகியவற்றுக்கு 5 நாள் பயணமாக நாளை புறப்படுகிறார்.
இப்பயணத்தின்போது நைஜீரியாவுடன் உள்ள இருதரப்பு உறவுகள், பிரேசில், தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா ஆகிய நாடுகளுடன் உள்ள முத்தரப்பு உறவுகள் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல்வேறு துறைகளில் நைஜீரியாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
வருகிற 17 ஆம் தேதி ஜோகனெஸ்பர்க், பிரிட்டோரியா ஆகிய நகரங்களில் நடைபெறும் இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா (IBSA) ஆகிய நாடுகளுக்கிடையிலான மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்கிறார்.
பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய இரண்டு நாடுகளுமே அணு எரிபோருள் வழங்கும் நாடுகள் குழுவில் உறுப்பினர்கள் ஆவர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தின் நிலையை இரு நாடுகளும் கவனமாகக் கவனித்து வருகின்றன.
கடந்த 1962 ஆம் ஆண்டு நைஜீரியா சென்ற முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு அந்நாட்டிற்குச் செல்லும் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் நைஜீரியாவின் நாடாளுமன்றத்திலும் உரையாற்றவுள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் நைஜீரியா சென்றார். ஆனால் அவர் காமன்வெல்த் மாநாட்டில் மட்டுமே பங்கேற்றார்.