சேது சமுத்திரத்திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வலியுறுத்தி நடக்கும் உண்ணாவிரதத்தில், காங்கிரஸ் பங்கேற்காதது, அதன் கோழைத்தனத்தையே காட்டுகிறது என்று கம்யூனிஸ்ட் செயலாளர் கலைநாதன் கண்டித்தார்.
சேது சமுத்திர திட்டத்தை விரைவு படுத்தக் கோரி, தமிழகம் முழுவதும் தி.மு.க தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் உண்ணாரவிதம் இருந்து வருகின்றனர். சென்னையில் தமிழக முதல்வரும், தி.மு.க தலைவருமான கருணாநிதி தலைமையில் உண்ணாவிரதம் இருக்கின்றனர். இதில் பா.ம.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சித் தலைவர்களும், தொண்டர்களும் பெரும் திரளாக பங்கேற்றுள்ளனர்.
இதே போல் புதுச்சேரியிலும் தி.மு.க அமைப்பாளர் ஜானகிராமன் தலைமையில், ஜனநாயக முற்போக்கு கூட்டணி கட்சியை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.
புதுவை மாநிலத்தில் ஆளும் கட்சியான காங்கிரஸ், இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளவில்லை. இதை உண்ணாவிரதப் பந்தலில் பேசும் போது, புதுவை மாநில கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் என். ஆர். கலைநாதன் சுட்டிக் காட்டினார்.
இவர் பேசும் போது, கம்யூனிஸ்ட் கட்சி, மத்திய அரசை ஆதரிக்கிறது. அதே நேரத்தில் இந்த போராட்டத்தி்ல முன்னணியில் இருக்கிறது. காங்கிரஸ் உண்ணாவிரதத்தில் பங்கேற்காதது, காங்கிரசின் கோழைத்தனத்தையே காட்டுகிறது என்று கண்டித்து பேசினார்.
அப்போது உண்ணாவிரதத்திற்கு தலைமை ஏற்று இருந்த, புதுவை மாநில தி.மு.க அமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமன் தலையிட்டு, இந்த மாதிரியான கருத்துக்களை பகிரங்கமாக கூறவேண்டாம் என்று கூறினார்.
ஆயினும், கம்யூனிஸ்ட் கட்சி எதற்கும் பயப்படவில்லை என்று கலைநாதன் பதிலளித்தார். கலைநாதனின் கருத்தை, மார்க்சிஸ்ட் கட்சி தலைவர் முருகனும் ஆதரித்தார்.
அதே நேரத்தில், புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் ஏ. அன்பழகன் தலைமையில் அந்த கட்சியின் தொண்டர்கள், பந்து தான் இல்லையே ? ஏன் பேருந்துகளை இயக்கவில்லை என்று கேட்டு தமிழ்நாடு போக்குவரத்து கழக அதிகாரிகளிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு போக்குவரத்துக் கழக பேருந்துகள் உப்பளம் டிப்போவில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. அந்த சமயத்தில் காவல்துறையினர் தலையிட்டு அ.தி.மு.க வினரை சமாதானப்படுத்தினார்கள்.
பிறகு அ.தி.மு.க தொண்டர்கள் புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக அலுவலகத்திற்கு சென்று, நகர பேருந்துகளை இயக்குமாறு வற்புறுத்தினார்கள. இதனால் அங்கு சிறிது நேரம் பதட்டம் நிலவியது.