அயல்நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கலாசாரம், அணுசக்தி உடன்பாட்டைவிட ஆபத்தானது என்று மாதா அமிர்தானந்தமயி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கேரளா மாநிலம் கொல்லத்தை அடுத்த வள்ளிக்காவு என்ற இடத்தில் அமிர்தபுரி ஆசிரமத்தில் மாதாவின் 54-வது பிறந்தநாள் விழாவில் தொண்டர்களுக்கு மாதா அமிர்தானந்தமயி ஆசி வழங்கி பேசுகையில், மேற்கத்திய கலாசாரப் படையெடுப்பால் இந்தியா ஆபத்தில் சிக்கியிருக்கிறது. பட்டினியால் வாடுகிறவர்களுக்கு உணவும், வீடு இல்லாதவர்களுக்கு பாதுகாப்பான வீடும், ஏழைகளைக் கைதூக்கிவிட உதவியும், நல்ல ஆன்மிகச் சூழலும்தான் இப்போதைய தேவை. இவையெல்லாம் வழங்கப்பட்டால்தான் நாடு வளர்வதாக அர்த்தம் என்றார்.
அயல்நாட்டு உடன்பாடுகள் குறித்து அனல்பறக்க விவாதங்கள் நடக்கின்றன. அயல்நாட்டுக் கலாசாரத்தால் ஏற்பட்டு வரும் ஆபத்துகளை நாம் உணர்ந்திருக்கிறோமா? எந்தவித பொருளாதார, அணு ஒப்பந்தத்தைவிட மிகவும் ஆபத்தானது இந்த மேற்கத்திய கலாசாரம் என்று மாதா அமிர்தானந்தமயி எச்சரிக்கை விடுத்தார்.
புதிதாக எது வந்தாலும் கண்ணைமூடிக்கொண்டு ஆதரித்துவிட நாம் தயாராக இருக்கிறோம். அது உடையானாலும், பொழுதுபோக்கு அம்சமானாலும், உறவானாலும் ஏற்றுக்கொண்டு விடுகிறோம். மற்றவர்களுடன் ஒத்துழைத்து வாழ்ந்த சமுதாயமாக இருந்த நாம் இப்போது சுயநலம் மிக்க சமூகமாக மாறிவிட்டோம்.
செல்போன்களில் மணிக்கில் பேசுவதையும், கணினி எதிரிலும் தொலைக்காட்சி எதிரிலும் மணிக்கணக்கில் அமர்ந்து பொழுதைத் தொலைப்பதையும் கைவிட்டு குடும்பத்தவர் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மாதா அமிர்தானந்தமயி கூறினார்.