நீதித் துறை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டதல்ல : சோம்நாத் சட்டர்ஜி!

Webdunia

சனி, 29 செப்டம்பர் 2007 (11:23 IST)
நீதித் துறை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது என்று யாரும் நினைக்க கூடாது என்று மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறியுள்ளார்.

டெல்லியில் குடியிருப்புப் பகுதிகளில் உள்ள கடைகள், அலுவலகங்கள், வீடுகளை இடிப்பதற்கு உச்சநீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற முன்னாள் தலைமை நீதிபதி சபர்வால் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவுகள், பெரிய வணிக வளாகங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அவரின் மகன்கள் இருவருக்கு ஆதாயம் அளிக்கும் நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்டன என்று மிட் டே நாளிதழ் கடந்த மே மாதம் தொடர் கட்டுரைகளை வெளியிட்டது. இதில் நீதிபதி சபர்வால் மீது குற்றம் சாற்றப்பட்டு இருந்தது.

இந்த குற்றச்சாட்டுக்களை நீதிபதி சபர்வால் மறுத்தார்.

இந்நிலையில், உச்ச நீதி மன்றத்தின் ஒய்வு பெற்ற தலைமை நீதிபதி சபர்வாலுக்கு எதிராக குற்றச்சாற்று கூறிய, மிட் டே தினசரியைச் சேர்ந்த செய்தியாளர்கள் நான்கு பேர் நீதிமன்றத்தை அவமதித்து விட்டார்கள் என்று குற்றம்சாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் சிறை தண்டனை வழங்கியது.

டெல்லி உயர்நீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்றம், மிட் டே செய்தியாளர்களுக்கு விதித்த தண்டனைக்கு தடை விதித்துள்ளது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அத்துடன் நீதித்துறையின் உரிமைகள் குறித்தும் பரந்த அளவில், பல தரப்பினரிடையே விவாதத்தை துவக்கி வைத்துள்ளது.

இது குறித்து மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி கூறுகையில்,

“நான் நீதித்துறை மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். ஆனால் நீதித்துறை என்பது விமர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்று யாராவது நினைத்தால், அதை ஜனநாயக அமைப்பில் ஏற்றுக் கொள்ள முடியாது. நாடாளுமன்றம், அரசு நிர்வாகம், ராணுவம், நீதித்துறை எதுவாக இருந்தாலும் சர்வாதிகார முறையில் செயல்படக்கூடாது.

பத்திரிக்கையாளர்களை அச்சுறுத்த வேண்டும் என்பதற்காக, நீதிமன்றம் ஆணைகள் பிறப்பிக்கப்படுவதாக தோன்றுகிறது. இந்த ஆணைகள் பல கேள்விக்குறிகளை எழுப்புகின்றன. இவைகளினால் பல சந்தேகங்கள் எழுகின்றன. இதற்கு நீதிபதி ஒருவரைப் பற்றி சந்தேகமோ, கேள்வியோ எழுந்தால் எதுவும் செய்யமுடியாது என்று அர்த்தமா?

நீதித்துறை இயல்புக்கு மீறி பதற்றப்படும் போக்கை கைவிட வேண்டும். நீதித்துறைக்கும், பொதுமக்களுக்கும், ஊடகங்களுக்கும் இடையே தேவையில்லாமல் எற்படும் மோதலுக்கு விரைவில் முடிவு கட்ட வேண்டும” என்று சோம்நாத் சாட்டர்ஜி வலியுறுததியுள்ளார்.

இதனிடையே நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், அரசியல் சட்டத்துக்கு முரணானது என்றும், இதை ஆய்வு செய்வதற்கு, இதுவே சரியான நேரம் என்றும் மூத்த வழக்கரிஞரும், முன்னாள் மத்திய சட்ட அமைச்சருமான ராம் ஜெத்மலானி கூறியுள்ளார்.

மற்றொரு மூத்த வழக்கரிஞரான ஹரிஸ் சால்வே, பத்திரிக்கையாளர்களுக்கு டெல்லி உயர்நீதி மன்றம் அளித்த சிறை தண்டனை விவேகமானதாக தோன்றவில்லை என்று கருத்து தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்