ஆதரவை விலக்கி கொள்வது எளிதல்ல : காரத்!
Webdunia
வெள்ளி, 21 செப்டம்பர் 2007 (18:26 IST)
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கி கொள்வது எளிதான விசயமில்லை என்று மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்திற்குப் பிறகு காரத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, மத்திய அரசின் தலைவிதி தன்னைச் சார்ந்திருப்பதாகக் கூறிய கருத்துக்களைக் காரத் திட்டவட்டமாக மறுத்தார். அப்படிக் கூறப்படுவது 24மணி நேரத் தொலைக்காட்சி ஒன்றின் அரசியல் என்றும், அதை நம்பமுடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
மத்திய அரசில் இரண்டாவது நிலையற்ற சக்தி தி.மு.க. என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி கூறிய கருத்துக்கள் பற்றிக் கேட்டதற்கு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள முக்கியக் கட்சிகளில் ஒன்று தி.மு.க. அது அரசின் நிலைத்தன்மையை பாதிக்கும் வகையில் செயல்படாது என்றார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் கூடியுள்ளது பற்றிக் கேட்டதற்கு, ஒவ்வொருவரும் வெவ்வேறு விசயமாக வந்தோம். எங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டோம் என்றார். மேலும் வருகிற 28ஆம் தேதி கொல்கத்தாவில் அரசியல் தலைமைக்குழு கூட உள்ளதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக நடைபெற்ற கூட்டத்தில், கட்சியின் மூத்த தலைவர்கள் சீதாராம் எச்சூரி, உமாநாத், என்.வரதராஜன், கே.வரதராஜன், ஏ.கே.பத்மநாபன் உள்படப் பலர் கலந்து கொண்டனர்.