வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வதைவிட, நேரடி முதலீடு அதிகரித்துள்ளது என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2006 -07 நிதியாண்டில் பங்குகளின் முதலீடு செய்திருப்பதை விட, நேரடி முதலீடு 5.6 பில்லியன் டாலர் அதிகமாக உள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
வெளிநாட்டு நிதி நிறுவனங்கள், முதலீட்டு நிறுவனங்கள், பரஸ்பர நிதி நிறுவனங்கள் ( மியூச்சுவல் பண்ட் ) ஆகியவை இந்திய நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்கின்றன.
மற்றொரு வகையில் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் தொழிற்சாலைகள் அமைத்தல் போன்று நேரடி நடவடிக்கையில் முதலீடு செய்கின்றன. இந்த வகை முதலீடுகள் அந்நிய நேரடி முதலீடு என குறிப்பிடப்படுகிறது.
முன்பு பங்குகளில் முதலீடு செய்வதை விட, நேரடி முதலீடு குறைவாக இருந்தது. இந்த போக்கு சென்ற நிதியாண்டில் ( 2006 - 2007 ) மாறியிருப்பதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
2003 -04 நிதியாண்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் 12.01 பில்லியன் டாலர் பங்குகளில் முதலீடு செய்திருந்தன. நேரடி முதலீடாக 6.32 பில்லியன் டாலர் மட்டுமே முதலீடு செய்திருந்தன.
இதே போல் 2004 -05 நிதியாண்டில் பங்குகளில் 8.94 பில்லியன் டாலரும், நேரடி முதலீடு 6.64 பில்லியன் டாலராக இருந்தது. 2006 -07 நிதியாண்டில் பங்குகளில் முதலீடு செய்திருப்பது 15.62 பில்லியன் டாலராகவும், நேரடி முதலீடு 21.19 பில்லியன் டாலராகவும் இருக்கிறது.
2007 மார்ச் மாதம் வரை மொத்தம் பங்குகளில் முதலீடு செய்திருந்தது 80.25 பில்லியன் டாலராகவும், நேரடி முதலீடு 72.33 பில்லியன் டாலராகவும் உள்ளது.
இந்திய நிறுவனங்கள் 2006 -2007 நிதியாண்டில் வெளிநாடுகளில் முதலீடு செய்திருப்பது 11 பில்லியன் டாலராக அதிகரித்தது . இது இதற்கு முந்தைய ஆண்டில் 2.93 பில்லியன் டாலராக மட்டுமே இருந்தது என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.