அத்துமீறிக் குடியிருந்தால் ஓய்வூதியத்தை நிறுத்தலாம் : உச்ச நீதிமன்றம்!
Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (19:34 IST)
நாடுமுழுவதும் உள்ள அரசுக் குடியிருப்புகளில் நிறைந்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் வகையில், ஓய்வுபெற்ற பிறகும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளைக் காலி செய்யாமல் உள்ள அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை நிறுத்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு மத்திய அரசிற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான ஒரு வழக்கு இன்று நீதிபதிகள் பி.என். அகர்வால், எஸ்.ஹெச். கபாடியா, டி.கே. ஜெயின் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு பங்களாக்களில் அனுமதியின்றிக் குடியிருக்கும் நபர்களை வெளியேற்றும் வகையில் அவர்களுக்கு எதிராகக் கைது, பணி நீக்கம் மற்றும் குற்றவியல் நடவடிக்கை உள்ளிட்ட எல்லா நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசிற்கு அனுமதியளித்தனர்.
மேலும் சட்டவிரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகச் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க அரசு சுணக்கம் காட்டுவதையும் உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
சட்ட விரோதமாகக் குடியிருப்போரைச் சட்டப்படிப் பிணையில் வெளிவராதபடி கைது செய்ய நடிவடிக்கை எடுக்கும்படி அதற்கான சட்டப்பிரிவைத் திருத்த முடியுமா என்பது குறித்து 4 வாரத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் புகாரைப் பதிவு செய்வதோடு குற்றவாளிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுப்பிரமணியம், இந்த விவகாரம் அரசின் தீவிரப் பரிசீலனையில் உள்ளது. சரியான முடிவெடுக்க கூடுதல் அவகாசம் தேவை என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கில் மாநில அரகளும் பதிலளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
அரசுக் குடியிருப்புகளில் வசிக்கும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள்,முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள் போன்றவர்களிடம் நிலுவையில் உள்ள கட்டணங்களை வசூலிப்பதில் கூட அரசு மெத்தனமாகச் செயல்படுகிறது என்று நீதிமன்றம் வருத்தம் தெரிவித்துள்ளது.
முன்னாள் பீகார் ஆளுநர் பூட்டா சிங், முன்னாள் மத்திய அமைச்சரும் மூத்த பா.ஜ.க தலைவருமான ஜஸ்வந்த் சிங், பா.ஜ.க தலைவர் இராஜ்நாத் சிங் போன்றவர்களும் தவறிழைப்பவர்களில் அடக்கம்.
விதிகளை மீறிக் குடியிருப்பவர்கள் வைத்துள்ள பாக்கித் தொகை பல கோடி ரூபாய்களைத் தாண்டியுள்ளது. ஆனால் அதை வசூலிப்பதற்கு அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. அரசுக் குடியிருப்புகளில் சட்ட விரோதமாகக் குடியிருப்பவர்களின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நீதிமன்றத்தை அணுகியதற்காக அரசை நீதிமன்றம் கடிந்து கொண்டது.