கருணாநிதி மகள் வீடு மீது தாக்குதல்!
Webdunia
புதன், 19 செப்டம்பர் 2007 (10:12 IST)
பெங்களூரில் உள்ள முதல்வர் கருணாநிதி மகள் வீட்டு மீது மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. பெட்ரோல் குண்டு வீசி கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
சேது சமுத்திர திட்டத்திற்காக ராமர் பாலத்தை இடிக்கக் கூடாது என்று பா.ஜ. உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் ராமர் பற்றி முதல்வர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகளை சேர்ந்தவர்கள் நேற்று பெங்களூர் ஜெயநகர் ராகுகுட்டா பகுதியில் உள்ள கருணாநிதியின் மகள் செல்வி வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.
இரவு 7 மணிக்கு கருணாநிதி மகள் செல்வி வீட்டிற்கு வந்த 100 பேர் கொண்ட கும்பல் கருணாநிதிக்கு எதிராக கோஷம் எழுப்பினர்கள். அப்போது ஆவேசம் அடைந்த கும்பல் வீட்டை கல் வீசி தாக்கியது. இதில் ஜன்னல் கண்ணாடிகள் நொறுங்கியது. சிலர் பெட்ரோல் குண்டுகளையும் வீசினார்கள்.
இது பற்றி தகவல் அறிந்த ஜே.பி.நகர் காவல்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்தனர். அதற்குள் அந்த கும்பல் கையில் வைத்திருந்த துண்டு பிரசுரங்களை வீட்டிற்குள் எறிந்து விட்டு அங்கிருந்து ஓடி விட்டது.
அந்த துண்டு பிரசுரத்தில், ''ராமருக்கு எதிராக கருணாநிதி இன்னும் பேசினால் தொலைத்து விடுவோம். ராவணனுக்கு ஏற்பட்ட கதிதான் உங்களுக்கும் ஏற்படும்'' என்று எழுதப்பட்டு இருந்தது.
தாக்குதல் நடந்தபோது கருணாநிதியின் மகள் செல்வியும், மருமகன் செல்வரும் நேற்று சென்னைக்கு வந்து விட்டனர். வீட்டில் காவலாளியும், வேலைக்கார பெண்ணும் இருந்தனர். வீட்டிற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கி.வீரமணி கண்டனம்
இந்த தாக்குதல் குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கையில், கருணாநிதி மகள் இல்லத்தில் ஆர்.எஸ்.எஸ். காவிகள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளார்கள் என்பது படு கோழைத்தனமாக செயல். தாக்குதல் நடத்தியர்கள் மீது கர்நாடக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.