அணுசக்தி ஒப்பந்தம் குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்துக்கு நாளை எங்களின் பதிலை தெரிவிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.
இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி உடன்பாடு குறித்து இடது சாரிகள் கடந்த வாரம் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தன. இதற்கு மத்திய அரசு 5 பக்க அளவில் பதிலை அளித்துள்ளது.
இதற்கான பதிலை நாளை (19 ஆம் தேதி ) நடக்க இருக்கும் அணுசக்தி உடன்பாடு உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் தெரிவிப்போம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினர் சீதாராம் யெச்சூரி தெரிவித்தார்.
அணுசக்தி உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்பாக மத்திய அரசிடம் பதில் அளிப்பதற்கு, இடதுசாரி கட்சித் தலைவர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்துவதுடன், விஞ்ஞானிகளுடனும் ஆலோசனை நடத்துவார்கள் என கூறப்படுகிறது.
அணுசக்தி உயர்நிலைக்குழு இறுதி ஒப்புதல் அளிப்பதற்கு முன், மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று கடந்த வாரம் இடதுசாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.