பிரதமர்-சோனியா மன்னிப்பு: அத்வானி
Webdunia
வெள்ளி, 14 செப்டம்பர் 2007 (09:47 IST)
ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனு கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தி உள்ளார்.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றுவதறக்காக ராமர் பாலத்தை இடிக்கக்கூடாது என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம் ராமர் பாலம் இடிப்பதற்கு இடைக்கால தடை விதித்து, மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்யவும் உத்தரவிட்டது.
இதற்கு மத்திய அரசின் தொல்பொருள் துறை சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், ராமர் உள்பட ராமாயணத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையிலேயே இருந்ததற்கு வரலாற்று ரீதியாகவோ, அறிவியல் ரீதியாகவோ எவ்வித ஆதாரங்களும் இல்லை என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு பா.ஜ உள்பட பல்வேறு இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து இருந்தன.
இந்த நிலையில் ராமர் பற்றி மனுதாக்கல் செய்ததற்காக பிரதமர் மன்மோகன்சிங்கும், சோனியாகாந்தியும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அத்வானி கூறியுள்ளார்.
ராமர் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என்று மத்திய அரசு தாக்கல் செய்த மனு கண்டிக்கத்தக்கது. இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் பொறுப்பை தட்டிக் கழிக்க முடியாது. அவர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அத்வானி வலியுறுத்தி உள்ளார்.
இந்த மனுவை கண்டித்து வெள்ளிக்கிழமை (இன்று) ஆர்ப்பாட்டமும், மனுவின் நகல் எரிப்பு போராட்டமும் நடத்தப்படும். ரத யாத்திரை நடத்துவது பற்றி பரிசீலிப்பேன். இப்பிரச்சினையை தேர்தலில் எழுப்பவோம். இதற்கு மந்திரிசபை பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த விவகாரத்தில் எங்களது நிலையை ஜெயலலிதாவும் ஆதரிக்கிறார். நான் அவருடன் டெலிபோனில் பேசினேன். ராமர் பற்றிய மனு மிகவும் ஆட்சேபகரமானது என்று அவர் கூறினார் என அத்வானி தெரிவித்தார்.