இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும், இது குறித்து ஆராய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்றும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நாளை வரை தள்ளிவைக்கப்பட்டது!
இன்று காலை மக்களவை கூடியதும் பாஜக உறுப்பினர்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்றும், அணு ஒப்பந்தத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று கோரி முழக்கமிட்டனர். கேள்வி நேரத்தை தள்ளிவைத்துவிட்டு விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆனால், அவர்களின் கோரிக்கையை ஏற்க அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி மறுத்ததால், பா.ஜ.க. உள்ளிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினர்களும், சமாஜ்வாடி உள்ளிட்ட 3ம் அணி உறுப்பினர்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கமிட்டபடி இருந்ததால் அவை நடவடிக்கைகள் 12 மணி வரையும், பிறகு 2 மணி வரையும் தள்ளிவைக்கப்பட்டது.
2 மணிக்குப் பிறகு அவை கூடியபோதும், பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கத்தில் ஈடுபட்டதையடுத்து நாள் முழுவதும் அவை நடவடிக்கைகளை தள்ளிவைப்பதாக மக்களவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி அறிவித்தார்.
இதற்கிடையே, இந்திய - அமெரிக்க அணு ஒத்துழைப்பு குறித்து ஆராய அமைக்கப்படவுள்ள குழு, நாடாளுமன்ற நடைமுறைகளின் கீழ் வராது என்று கூறிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி, அணு ஒப்பந்தம் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரிப்பதாகவும் கூறினார்.
மாநிலங்களவையிலும் பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் அமளியால் அவை நடவடிக்கைகள் நாளை வரை தள்ளிவைக்கப்பட்டது.