ஹைதராபாத்தில் மெக்கா மசூதில் நடந்த குண்டு வெடிப்பில் மூளையாக இருந்து செயல்பட்டவனும், ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் நடைபெற்ற இரட்டை குண்டு வெடிப்புகளில் தொடர்புடையவனுமான மொஹம்மது ஷரிஃபுதின் என்பவனை வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வங்கதேசத்தில் ஹூஜி என்ற அமைப்பை செயல்படுத்தி வரும் மொஹம்மது ஷரிஃபுதினை வங்கதேச காவல்துறையினர் கைது செய்துள்ளதாகவும், தொடர்ந்து அவனிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹைதராபாத்தில் கடந்த வாரம் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய மொஹம்மது ஷரிஃபுதின் உட்பட இரண்டு பேரை பாதுகாப்புப் படை மற்றும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். பாகிஸ்தானில் இருந்து செயல்படும் சில பயங்கரவாத இயக்கங்களுடன் மொஹம்மது ஷரிஃபுதினுக்கு தொடர்பிருப்பதும் தெரிய வந்துள்ளது. ஹஜி என்ற பயங்கரவாத அமைப்பின் தலைவர் அப்துல் ஷஹித் மொஹம்மது என்கிற பிலாலின் உத்தரவின் பேரில்தான் ஷெரிஃபுதின் இந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளான். கடந்த ஆகஸ்ட் 25ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள பூங்கா ஒன்றிலும், துரித உணவகத்திலும் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 40க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். மேலும் பல இடங்களில் பொதுமக்களை குறி வைத்து வைக்கப்பட்டிருந்த குண்டுகள் வெடிப்பதற்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.