உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் லாரி மோதி 4 இளைஞர்கள் பலியானதால் கோபமுற்ற மக்கள் கலவரத்தில் ஈடுபட்டதால் அங்கு ஊடரங்கு பிறப்பிக்கப்பட்டது.
ஷாபி பராத் எனும் சமாதி ஊர்வலத்தில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த 4 இஸ்லாமிய இளைஞர்கள் மீது வேகமாக வந்த ஒரு லாரி மோதியது. ஆக்ரா நகரில் மகாத்மா காந்தி சாலையில் உள்ள சுபாஷ் செளக் என்ற இடத்தில் இன்று அதிகாலை இந்த சம்பவம் நடந்தது.
சம்பவ இடத்திலேயே அந்த 4 இளைஞர்களும் உயிரிழந்தனர். இதனால் கோபமுற்ற அப்பகுதி மக்கள், மகாத்மா காந்தி சாலையில் வந்த பல லாரிகளை தாக்கினர். 10 லாரிகளுக்குத் தீயிட்டனர். பல கடைகளுக்கும் தீ வைத்தனர்.
கலவரத்தைக் கட்டுப்படுத்த வந்த காவலர்கள் மீது கல் வீச்சு நடந்தது. இதனால் காவல்துறையினர் ஆக்ரா நகரின் சில பகுதிகளில் ஊரடங்குப் பிறப்பித்துள்ளனர். தற்பொழுது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.