சேலம் கோட்டம் : லாலுவிற்கு பிரதமர் கோரிக்கை!

Webdunia

திங்கள், 27 ஆகஸ்ட் 2007 (15:59 IST)
சேலம் ரயில்வே கோட்டம் தொடர்பாக தமிழக, கேரள அரசுகளுக்கிடையே நிலவிவரும் பிரச்சனைகளை தீர்க்க இரு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசுமாறு மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவை பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டுள்ளார்!

இது குறித்து ஏற்கனவே லாலு பிரசாத் யாதவிற்கு பிரதமர் கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்த பிரதமர் அலுவுலக மூத்த அதிகாரி, இப்பிரச்சனை சுமுகமாக தீர்க்கப்படவேன்டும் என்பதில் பிரதமர் உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

இதற்கிடையே இந்த பிரச்சனையில் தீர்வு காண புதிய திட்டம் ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்படி, கேரள மாநிலத்திற்கென புதியதாக 'வெஸ்ட் கோஸ்ட் ரயில்வே' என்ற மண்டலத்தை உருவாக்கும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே கோட்டம் அமைக்கப்பட்டால், கோட்டங்களின் எண்ணிக்கை 17ஆக அதிகரிக்கும். கடந்த 1997ம் ஆண்டில் இது 9ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ரயில்வே கோட்டம் வரும் 15ம் தேதி துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

சேலம் கோட்டம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று கூறியுள்ள கேரள அரசு, லாபகரமாக இயங்கிவரும் பாலக்காடு கோட்டத்தை பிரிப்பதையே எதிர்ப்பதாகத் தெரிவித்துள்ளது. இருப்பினும் புதிய கோட்டம் உருவாக்கப்படும் இந்த விவகாரத்தில் கேரளாவின் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசியல் பின்னடைவை சந்தித்திருப்பதாகவே அம்மாநில அரசியல் கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்