ஹைதராபாத்தில் 43 பேர் கொல்லப்பட்ட தொடர் குண்டு வெடிப்பின் பின்னணியில் லஸ்கர்-ஈ-தயீபா அல்லது ஜெய்ஸ்-ஈ-மொஹம்மது இயக்கங்களின் சதி வேலை இருக்கலாம் என்று மத்திய அரசு கூறியுள்ளது!
புதுடெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சகச் செயலர் மதுக்கர் குப்தா, ஹைதராபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக நடைபெற்று வரும் புலனாய்வு ஆரம்ப கட்டத்தில்தான் உள்ளது என்றாலும், இதுவரை கிடைத்துள்ள சில தகவல்களின் அடிப்படையில் இச்சதித்திட்டத்தின் பின்னணியில் உள்ளவர்களை அடையாளம் காண முடிகிறது என்று கூறினார்.
இந்த குண்டு வெடிப்பின் பின்னணியில் உள்ள அமைப்புகள் நமது நாட்டிற்கு வெளியே இருந்து இங்கு இப்படிப்பட்ட நடவடிக்கைகளைத் தூண்டி வருகின்றனா என்று மதுக்கர் குப்தா கூறினார்.
எல்லைப் பாதுகாப்புப் படையின் ஒரு குழுவை இமாலய மலையேற்றத்திற்கு அனுப்பி வைத்த பிறகு செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மதுக்கர் குப்தா, ஹைதராபாத் குண்டு வெடிப்பு குறித்து ஆராய்ந்து வரும் பாதுகாப்பு அமைப்புகளும், மாநில காவல்துறையும் லஸ்கர்-ஈ-தயீபா அல்லது ஜெய்ஸ்-ஈ-மொஹம்மது இயக்கத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகக் கூறியவர், இந்த சதிச் செயலை திட்டமிட்டு நிறைவேற்றியவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவதே முக்கியமானது என்று கூறினார்.