அணு ஒப்பந்தம் : நிபுணர் குழு அமைத்து ஆராய முடிவு!

Webdunia

திங்கள், 20 ஆகஸ்ட் 2007 (10:42 IST)
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து எழுந்துள்ள சட்டப்பூர்வமான கவலைகள் குறித்து ஆராய நிபுணர் குழு அமைப்பதென ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி முடிவு செய்துள்ளது.

அணு சக்தி ஒத்துழைப்பை நடைமுறைப்படுத்தும் 123 ஒப்பந்தத்தினை முழுமையாக நிராகரிக்க வேண்டும். இல்லையேல் அரசியல் ரீதியான விளைவை சந்திக்க நேரிடும் என்று இடது சாரிகள் ஏற்படுத்திய நெருக்கடியைத் தொடர்ந்து நேற்று இரவு கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி, அணு சக்தி ஒத்துழைப்பு குறித்து தேச நலனை கருத்தில் கொண்டு கூறப்பட்டுள்ள சட்டப்பூர்வமான கவலைகள் குறித்து ஆராய நிபுணர் குழுவை அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார்.

ஆளும் ஐ.மு. கூட்டணியின் இம்முடிவு குறித்து ஆராய இடதுசாரிக் கட்சிகள் தனித்தனியாக இன்று கூடி ஆராய்கின்றனர். இந்திய - அமெரிக்க அணுசக்தி ஒத்துழைப்பு குறித்து நாடாளுமன்றத்தில் முக்கிய விவாதம் நடைபெற உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்