அணு ஒப்பந்தம் : மக்களவை 2 மணி வரை தள்ளிவைப்பு

Webdunia

வியாழன், 16 ஆகஸ்ட் 2007 (13:19 IST)
123 ஒப்பந்தம் குறித்து விளக்கம் அளித்த பிரதமர், அவைக்கு தவறான தகவல் தந்துவிட்டார் என்று கூறி பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.

இன்று காலை அவை துவங்கியதும் பிரதமரைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டதால் அவை நடவடிக்கைகள் 11.30 மணி வரை தள்ளிவைக்கப்பட்டது.

மீண்டும் அவை கூடியதும் பேச எழுந்த பாஜக தலைவர் விஜய் மல்கோத்ரா, பிரதமரின் விளக்கத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி தான் வைத்த தாக்கீது குறித்து பிரதமரின் விளக்கத்தின் மீது உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அதற்கு பதிலளித்த அவைத் தலைவர் சோம்நாத் சாட்டர்ஜி, "அது தொடர்பாக நீங்கள் அளித்த தாக்கீது இன்று காலை எனக்குக் கிடைத்துள்ளது. அது பற்றி பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் புதிய உறுப்பினர் அல்ல. உங்களுக்கு அவை விதிமுறைகள் தெரியும்" என்று கூறினார்.

ஆயினும், பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர்.

"இது எனது அவை அல்ல. இதை நீங்கள் நடத்த விரும்பவிலலஎனில் அது நடக்காது" என்று சோம்நாத் சாட்டர்ஜி கூறினார்.

அப்பொழுது மார்க்சிஸ்ட் உறுப்பினர் பாசுதேவ் ஆச்சாரியார் பேச எழுந்தார். அவரை நோக்கி கண்டனத்துடன் பேசிய சோம்நாத் சாட்டர்ஜி, இந்த அவையை நீங்கள் உங்கள் விருப்பத்திற்கு நடத்த முயற்சிக்காதீர்கள். இந்த நாடு குறித்து உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் கவலைகள் உண்டு. இந்த அவையில் நடப்பது குறித்து நான் எனது வருத்தத்தைத்தான் தெரியப்படுத்த முடியும் என்று கூறினார்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால் அவை நடவடிக்கைகள் 2 மணி வரை தள்ளிவைக்கப்படுவதாக அறிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்